உலகக் கோப்பையின் 17 வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே புனே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸை வென்ற வங்கதேச ஆணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களம் இறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான டன்ஸித் மற்றும் லிட்டன் தாஸ் இணை தாஸ் சிறப்பான துவக்கம் தந்தது. அரை சதம் அடித்த டன்ஸித் 51 ரன்களில் அவுட் ஆனார். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்தது. பின்னர் இணைந்த கேப்டன் ஷான்டோ 8 ரன்களில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த மெஹிதி ஹசனும் 3 மூன்று ரன்களில் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த லிட்டன் தாஸ் 66 ரன்களில் ரவீந்திர ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அணியின் ஸ்கோர் 200 ஐ தாண்டுமா என்று வங்கதேச ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்த நிலையில் விக்கெட் கீப்பர் ரஹீமும், ஆல்ரவுண்டர் மெகமதுல்லாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரஹீம் 38 ரன்களுக்கும், மெகமதுல்லா46 ரன்களுக்கும் ஆட்டம் இழக்க, இறுதியில் வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், குல்தீப் மற்றும் தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் ரோகித் மற்றும் கில் இணை சிறப்பான துவக்கம் தந்தது. கில் பொறுமை காட்ட அதிரடியாய் விளையாடிய கேப்டன் ரோஹித் பௌண்டரிகளும் சிக்ஸர்களும் பறக்க விட்டார். 40 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த ரோஹித் சிக்ஸர் அடித்து அரை சதம் கடக்க நினைத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கில் நிதானமாக ஆடி அரை சதம் கடந்து 53 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கோலி ஸ்ரேயாஸ் இணை சிறப்பாக ரொட்டேட் செய்து பொறுமையாக ஆடியது. கோலி 48 பந்துகளில் அரை சதம் கடந்தார். நன்றாக ஆடிக் கொண்டிருந்த ஸ்ரேயாஸ் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு 19 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
பின்னர் கோலி மற்றும் ராகுல் இணை ஆஸ்திரேலியாவுடன் நடந்த முதல் ஆட்டத்தை போலவே பொறுப்புடன் ஆடியது. ஒன்றும் இரண்டுமாக ரன் சேர்த்த கோலியும் ராகுலும், தவறான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டவும் தவறவில்லை. அணியின் வெற்றிக்கு 2 ரன்கள், கோலியின் சதத்திற்கு 3 ரன்களும் தேவைப்பட்ட நிலையில் கோலி சிக்ஸர் அடித்து அணியின் வெற்றியையும், தனது சதத்தையும் பூர்த்தி செய்தார். ராகுல் 34 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். சிறப்பாக ஆடி சதம் அடித்த கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
கோலி அடித்த இந்த சதம் இதே மைதானத்தில் அவர் அடிக்கும் 3 ஆவது சதம் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் கோலியின் 48வது சதமாகும். உலகக்கோப்பை போட்டிகளில் சேசிங்கில் கோலியால் எடுக்கப்பட்ட முதலாவது சதமாகும். ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த இரண்டாவது வீரரானார். ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் (49) சாதனையை சமன் செய்ய கோலிக்கு இன்னும் ஒரு சதமே மீதம் உள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் 26000 ரன்களைக் குறைவான போட்டிகளில் கடந்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் 600 இன்னிங்ஸ்களில் கடந்த இச்சாதனையை, கோலி 567 இன்னிங்ஸ்களில் கடந்துள்ளார். மேலும் ஒரு சாதனையாக கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த நான்காவது வீரரானார். சச்சின், சங்கக்கரா, பாண்டிங் வரிசையில் 4 ஆவது வீரராக இணைந்துள்ளார்.
வெற்றிக்கு பின்னர் கேப்டன் ரோஹித் பேசியதாவது, “நாங்கள் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுக்கவில்லை. ஆனால் மிடில் ஓவர்களில் வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஜடேஜாவின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் சிறப்பாக அமைந்தது. ஹர்திக்கின் காயம் பெரிதாக கவலை கொள்ளத் தேவையில்லை. நாளை காலை எழுந்தவுடன் அவருக்கு சோதனை செய்யப்பட்டு, பிறகு திட்டங்கள் மேற்கொள்ளப்படும். அணியில் உள்ள அனைவரும் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். ஏனென்றால், எங்களை சப்போர்ட் செய்ய மக்கள் அதிக அளவில் மைதானத்திற்கு வருகின்றனர். ரசிகர்கள் எங்களை ஏமாற்றவில்லை. எனவே நாங்களும் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காத வகையில் விளையாட வேண்டும்” என்றார்.
தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ரன் விகித அடிப்படையில் (+1.659) இந்திய அணி இரண்டாவது இடத்தையே பிடித்துள்ளது. நியூசிலாந்து அணி நான்கு வெற்றிகளுடன் ரன் விகித அடிப்படையில் அதிகம் பெற்று (+1.923) முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. தோல்வியை சந்திக்காத இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அக்டோபர் 22ஆம் தேதி தரம்சாலாவில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.
- வெ.அருண்குமார்