Skip to main content

ஒரு காலத்தில் குட்டி அணி.. இன்று நம்பர் 1 பவுலர், ஆல்ரவுண்டர், உலகசாதனைகள் கொண்ட அணி..

Published on 22/12/2018 | Edited on 22/12/2018

ஒரு காலத்தில் குட்டி அணியாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி இன்று நம்பர் 1 அணிக்கு கடும் போட்டி கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்த அணி தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மாஸ் காட்டி வருகிறது. இந்த அணியின் சில வீரர்கள் உலகின் சிறந்த வீரர்களாக மாறியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் ஹஸ்ரதல்லாஹ் சசாய் 6 பந்துகளில், 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார். 12 பந்துகளில் அரைசதம் அடித்து யுவராஜ் சிங் மற்றும் கிறிஸ் கெய்ல் சாதனையை சமன் செய்தார். 

 

 

mm

 

 

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் டி20 போட்டிகள்தான். இந்த வாரம் இந்த வருடத்திற்கான தொடர் தொடங்கியது. இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர், தென் ஆப்பிரிக்கா அணியின் காலின் இன்ராம், நியூசிலாந்து அணியின் பிரண்டேன் மெக்குல்லம், ஆப்கானிஸ்தான் அணயின் ரசித் கான், முஹம்மது நபி மற்றும் முஜீப் உர் ரஹ்மான் போன்ற மிகப்பெரிய சர்வதேச பிரபலங்கள் இந்தத் தொடரில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

 

இந்த ஆண்டு நடைபெறும் பிக் பேஷ் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். 17 வயதே ஆன முஜீப் உர் ரஹ்மான் தனது முதல் போட்டியிலேயே சாதனை படைத்துள்ளார். அவர் ஒரு பந்துவீச்சாளராக இருந்தாலும், பேட்டிங்கில் சாதனை படைத்துள்ளார். 11 வது வீரராக களமிறங்கி 22 பந்துகளில் 27 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி விக்கெட்டிற்கு ஜிம்மி பீர்சன் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஜோடி 29 பந்துகளில் 45 ரன்கள் குவித்தனர். இதுவரை பிக் பேஷ் தொடரில் கடைசி வீரராக களமிறங்கி 15 ரன்களுக்கு மேல்  எந்த வீரரும் எடுத்ததில்லை. இது இந்தத் தொடரின் வரலாற்று சாதனையாக உருவெடுத்துள்ளது.

 

முஜீப் உர் ரஹ்மான் இதுவரை ஆப்கானிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 47 டி20 போட்டிகளில் 49 விக்கெட்கள், 6.90 எகனாமி ரேட். 16 ரன்களுக்கு  4 விக்கெட்கள் எடுத்தது சிறந்த பந்துவீச்சாக உள்ளது. 

 

mm

 

 

20 வயது சுழற்பந்து வீச்சாளர் ரசித் கான் ஆப்கானிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டிகளில் தனது மாயாஜால பந்துவீச்சால் அசத்தி வருகிறார். பிக் பேஷ் தொடரில் முதல் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிராக தனது சுழற்பந்து  வீச்சால் திணறடித்தார். 4 ஓவர்களில் 19 ரன்களுக்கு 3 விக்கெட்கள் விழ்த்தி அசத்தியுள்ளார். சிறப்பாக பந்துவீசியதற்காக ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.  139 உள்ளூர் டி20 போட்டிகளில் 6.08 எகனாமி ரேட் கொண்டு  210 விக்கெட்கள் எடுத்துள்ளார். சர்வதேச டி20 பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடமும், ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது இடமும் பெற்றுள்ளார். ஆல் ரவுண்டர் பட்டியலில் ஒருநாள் போட்டியில்  முதல் இடத்தில் உள்ளார்.

 

ஆப்கானிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டரான முஹம்மது நபி ஆப்கானிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, வங்க தேசம், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். தற்போது நடைபெறும் பிக் பேஷ் தொடரில் முதல் போட்டியில் 27 பந்துகளுக்கு 35 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இதுவரை 191 உள்ளூர் டி20 போட்டிகளில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். 2720 ரன்கள், 207 விக்கெட்கள் என தனது ஆல் ரவுண்டர் திறமையை அனைத்து நாடுகளிலும் நிருபித்துள்ளார்.  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆல் ரவுண்டர் பட்டியலில் மூன்றாவது இடமும், டி20 போட்டிகளில் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.

 

ஆப்கானிஸ்தான்  அணி வீரர்கள் நவம்பர் மாதம் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமசந்திர விளையாட்டு அறிவியலுக்கான சென்டரில் பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். அண்டர் - 19 வீரர்கள் உட்பட முக்கிய வீரர்களான  ரசித் கான், முஜீப் உர் ரஹ்மான், முகம்மது ஷெஹ்சாத் ஆகியோர் பல்வேறு தொடர்களுக்காக பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். ஆப்கானிஸ்தான்  அணி வீரர்களுக்கு இந்தியா பல்வேறு வகையில் உதவி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி இந்தியா - ஆப்கானிஸ்தான்  அணிகளுக்கு இடையே இந்தியாவில் இந்த வருடம் நடைபெற்றது. இதன் மூலம் 12- வது அணியாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானது ஆப்கானிஸ்தான். 

 

ஆரம்பம் முதல்  2015-ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். பிறகு இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவில் தனது கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வந்தது ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் பி.சி.சி.ஐ. உதவி வருவது குறிப்பிடத்தக்கது.