2015-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் முடிவிலேயே, தோனியின் ஓய்வு பற்றிய பேச்சுகள் எழுந்துவிட்டன. தன்னிடம் அதுபற்றி கேள்வியை எழுப்பிய செய்தியாளரின் வாயில் இருந்தே, தான் ஃபிட்டாக இருப்பதாக சொல்லவைத்து, ஓய்வு தேதியைத் தள்ளிப் போட்டார் தோனி. கேப்டனாக விராட் கோலி பொறுப்பேற்றது முதலே, தோனியின் ஓய்வு குறித்து பரவலாக செய்திகள் வருவதுண்டு.
விளையாட்டு என்றாலே வெற்றி, தோல்விதான். முடிவென்று வரும்போது, தோல்வி வந்தால் தோனிதான் காரணமென்று விமர்சனங்கள் எழத் தொடங்கின. வயதாகி விட்டதோ என்று கிண்டலாகச் சொல்லும்போது, அப்பாக்கள் அணியான சென்னை சூப்பர் கிங்ஸை ஐபிஎல் கோப்பையைத் தூக்கிச் சுமக்க வைத்தார் தல தோனி. நேர்மறையோ, எதிர்மறையோ… தன் விளையாட்டின் மூலமாகவே பதில் சொல்வார் அவர்.
2019 உலகக்கோப்பை தொடரிலும் தோனிமீதான விமர்சனங்கள் குறைந்தபாடில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டெஸ்ட் ப்ளேயரைப் போல் ஆடியதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அணியாக களமிறங்கியும், சக வீரர்களின் தோல்வியையும் தோனியே தோளில் சுமப்பது இது முதல்முறையல்ல. இந்த நிலையில்தான், டேபிள் டாப்பரான இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை எதிர்கொண்டது. வெறும் 240 ரன்களை இலக்காகக் கொடுத்தது நியூசிலாந்து அணி.
சுலபமாகப் பட்டாலும் இந்த இலக்கை சேஸ் செய்யத் தொடங்கிய முதல் பந்தில் இருந்தே, இந்திய அணி சறுக்கலைச் சந்தித்தது. ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் என அடுத்தடுத்து இந்தியாவின் டாப் ஆர்டரைக் கழற்றி வீசியது நியூசிலாந்தின் வேகப்பந்து படை. நான்காவது விக்கெட்டாக தோனி அல்லது தினேஷ் கார்த்திக்கைக் களமிறக்கும் கேப்டன் விராட்டின் முடிவை மாற்றி, ரிஷாப் பாண்டை இறக்கிய கோச் ரவி சாஸ்திரியின் முடிவும் தோற்றுப்போனது. இதனால், நேரடியாக சென்று தன் ஆக்ரோஷத்தை கோச்சிடம் காட்டினார் விராட்.
தினேஷ் கார்த்திக், ரிஷாப் பாண்ட், ஹர்திக் பாண்டியா என மீண்டும் இறங்கு முகத்தைச் சந்தித்திருந்த இந்திய அணி, நூறு ரன்களைக் கடப்பதற்குள் படாத பாடு பட்டது. ஆனால், தோனி – ரவீந்திர ஜடேஜா இணை இந்திய வீரர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்து, மீண்டும் வெற்றிவரை கூட்டிச்சென்றது. இனி வாய்ப்பே இல்லை என்ற நிலை தலைகீழாக மாறி, ப்ரெஷர் முழுவதும் நியூசிலாந்து அணியின் பக்கம் திரும்பிய நிலையில்தான் அடுத்தடுத்து வீழ்ந்தது தோனி – ஜடேஜா இணை. வேகம் வெற்றியாக மாறவில்லை. 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி.
தோனி நின்றிருந்தால் வெற்றி கிடைத்திருக்கும் என்பது ரசிகர்கள் எண்ணம். அதனால்தான், தோனியின் ரன் அவுட் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகவே இப்போதும் ரசிகர்களை நோகடிக்கிறது. தோல்வி விரக்தியில் திணறி நடக்கும் தோனியின் வீடியோவை, பாகுபலி பேக் க்ரவுண்டுடன் இணைத்து, கவலையை வெளிப்படுத்துகிறார்கள் அவர்கள். தன் பயணத்தை ரன் அவுட்டில் தொடங்கி, ரன் அவுட்டில் முடித்துவிட்டார் என்று கண்ணீர் வடிக்கிறார்கள். இன்னொருபுறம், பீல்டிங் செட்-அப்பில் இருந்த குளறுபடியை அம்பயர்கள் கண்டுகொள்ளவில்லை என்ற புகார்களும் ஐசிசியின் கதவைத் தட்டுகின்றன.
நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பேசும்போது, “240, 250 ரன்கள் அடித்தால் போதும், மைதானத்தின் போக்கு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பினோம். அடித்தோம். ஜெயித்தோம்” என்கிறார். அந்த வேகம் இந்திய அணியிடம் இல்லாமல் போனது. தோனியின் விக்கெட் மிகவும் முக்கியமானது. அதைக் கைப்பற்றியதுதான் எங்கள் வெற்றிக்குக் காரணமானது” என்று கூறியிருக்கிறார்.
சச்சின் அவுட் ஆனதும் டிவியை ஆஃப் செய்துவிட்டுச் சென்ற காலத்தை மாற்றிய பெருமைக்குரியவர் தோனி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா உலகக்கோப்பை பெறக் காரணமாக இருந்த, தோனியின் கடைசி சிக்சரே அதற்கு உதாரணம். அமைதியாக, ஆக்ரோஷமாக, அதிரடியாக என எதிரணியை எல்லா ரூபங்களிலும் கலங்கடித்தவர் அவர். கடைசி ஓவரின், கடைசி பந்து வீசும்போதும் வெற்றி பெறுவதற்கான கணக்குகள் அவர் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்கும். இந்திய அணியின் வெற்றி உச்சங்களில் அந்தக் கணக்குகளுக்கு தனி பங்கு உண்டு. அதனால்தான், இந்திய கிரிக்கெட்டின் முகமென்று தோனியை அழைத்து, பெருமிதம் கொண்டிருக்கிறது ஐ.சி.சி.
தோல்வி ஒருபோதும் வெற்றியாளர்களை வீழ்த்துவதில்லை. தோனி மட்டும் அதில் விதிவிலக்கானவரா என்ன? தொடர்ந்து உற்சாகப்படுத்துங்கள் தோனி!