இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். அதனையடுத்து பல்வேறு தரப்பிலிருந்து அவருக்கு வாழ்த்துகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. தற்போது இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளரான மாண்டி பனேசர் தோனி உடனான ஒரு சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "தோனி ஸ்டம்ப்பிற்கு பின்பு நின்று பவுலர்களுக்கு அறிவுரை கூறுவார். இவருக்கு வைடாக பந்து வீசு, சிக்ஸர் அடிக்க முயற்சிக்கிறார், நேராக பந்து போடு என நிறைய கூறுவார். தோனி எனக்கு இந்தி தெரியாது என்று நினைத்து கொண்டிருந்தார். ஆனால் எனக்கு இந்தி, பஞ்சாபி இரண்டும் நன்றாகவே தெரியும். இருந்தாலும் நான் எனக்கு இந்தி தெரியாதது போலவே நடந்துகொண்டேன். அவருடைய அறிவுரைப்படி, பந்து வீசி பல முறை இந்திய பவுலர்கள் விக்கெட் எடுத்துள்ளனர், தோனியிடம் எனக்கு பிடித்த விஷயமே இதுதான். தோனிக்கு எதிரான அணியில் விளையாடியதை நான் பெருமையாக நினைக்கிறேன்" என்றார்.
மேலும் அவர் பேசும்போது, "மற்ற வீரர்களின் மனவோட்டத்தை தெளிவாக கணிப்பார். ஆனால் அவரை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. அதுதான் அவரது பலம் என்று நினைக்கிறேன். ஓவருக்கு 15 ரன்கள் வீதம் கடைசி மூன்று ஓவர்களுக்கு தேவைப்படுகிறது என்றால் கூட எளிமையாக அதை அடித்துவிடுவார். அதை அவர் எப்படிச் செய்கிறார் என்று நமக்குத்தெரியாது. அது தான் தோனியின் மிகப்பெரிய ரகசியம்" என்றார்.