ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதற்கட்டமாக இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. ஒருநாள் தொடரையடுத்து இருபது ஓவர் தொடரும், அதனைத்தொடர்ந்து டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளன.
ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடர்களில் முழுமையாக பங்கெடுக்கவுள்ள விராட் கோலி, டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு இந்தியா திரும்ப உள்ளார். விராட் கோலி இல்லாத இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் விதத்தைப் பார்க்க பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் விராட் கோலி குறித்து பேசுகையில், "என்னுடைய குழந்தை தற்போது கிரிக்கெட் விளையாடி வருகிறான். விராட் கோலி பேட்டிங் செய்ய வரும்போது நான் தூங்கிவிட்டால் என்னை எழுப்புங்கள் என என்னிடம் கூறுவான். விராட் கோலி ஆட்டமிழந்த பிறகு மீண்டும் அறைக்குள் சென்றுவிடுவான். அதன்பிறகு கிரிக்கெட் பார்க்கமாட்டான். குழந்தைகளிடம் அந்த அளவிற்கு அவர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் சிறப்பு வாய்ந்த வீரர்" எனக் கூறினார்.
மேலும், ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் குறித்துப் பேசுகையில், "விராட் கோலியின் பேட்டிங் குறித்து நமக்கு எந்தக் கவலையும் இல்லை. சமகாலத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அவர் சிறந்த வீரர். அதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. விராட் கோலி இல்லாமல் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி குறித்துதான் கவலைப்படுகிறேன். அவர் இல்லாமல் இந்தியா வெற்றி பெற முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. டெஸ்ட் அணியில் அவர் அந்த அளவிற்கு முக்கியமான வீரர். ஒரு சதம் அடித்துவிட்டால் அதன்பிறகு தொடர்ச்சியாக 3-4 சதங்கள் அடித்துவிடுவார்" எனக் கூறினார்.