Skip to main content

காமன்வெல்த் போட்டியில் முதல் தங்கம்! - மீராபாய் சானு அபார சாதனை.. 

Published on 05/04/2018 | Edited on 05/04/2018

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை மீராபாய் சானு பெற்றுத்தந்தார்.

 

Meera

 

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21ஆவது காமன்வெல்த் போட்டிகள் நேற்று கோலகலமாகத் தொடங்கின. 76 நாடுகள் கலந்துகொண்டிருக்கும் இந்தப் போட்டிகள் 11 நாட்கள் நடைபெறும். 

 

இதில் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சாய்கோம் சானு (23) களமிறங்கி, இந்தியாவிற்கான முதல் தங்கத்தைப் பெற்றுத்தந்தார். முதலில் 80 கிலோ, 84 கிலோ மற்றும் 86 கிலோ என தொடர்ச்சியாக தூக்கி அரங்கத்தை அதிரவைத்தார். பின்னர் அவரது எடையை விட அதிகமான 103 கிலோ, 107 கிலோ மற்றும் 110 கிலோ என கிளீன் அண்ட் ஜெர்க்காக தூக்கினார். மேலும், இதன்மூலம் இந்த விளையாட்டின் ஒட்டுமொத்த சாதனைகளையும் அவர் முறியடித்தார். 

 

மீராபாய் சானு 2014ஆம் ஆண்டு க்ளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். சானு இன்றைய போட்டியில் 196 கிலோ (86 கிலோ+110 கிலோ) தூக்கியிதன் மூலம், சில மாதங்களுக்கு முன்னர் உலக சாம்பியன்சிப் போட்டியில் அவர் தூக்கிய 194 கிலோ சாதனையையும் முறியடித்தார். 

 

முன்னதாக, ஆண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவின் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்று, இந்தியாவின் பதக்கப்பட்டியலைத் தொடங்கிவைத்தார்.