8 ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
பெர்த் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே விக்கெட்களை பறிகொடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 68 ரன்கள் அடித்தார்.
சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்க அணியில் லுங்கி இங்கிடி 4 விக்கெட்களும் பார்னெல் 4 ஓவர்கள் வீசி ஒரு ஓவர் மெய்டனாகவும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும் எடுத்தார்.
134 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி துவக்கத்தில் சில விக்கெட்களை இழந்தாலும் மார்க்ரம், மில்லர் ஜோடி இணைந்து தென் ஆப்பிரிக்க அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது. 19.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களையும் ஷமி, ஹர்திக், அஷ்வின் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். ஆட்டநாயகனாக இங்கிடி தேர்வு செய்யப்பட்டார்.
ஆட்டம் முடிந்ததும் ரோஹித் சர்மா போட்டி குறித்து பேசினார். அதில், “நாங்கள் பீல்டிங் சரியாக செய்யவில்லை என்பது உண்மை. நாங்கள் சில ரன் அவுட்களை விட்டுவிட்டோம். இந்த போட்டியில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டோம். அதே சமயத்தில் மில்லர் சில ஷாட்களை மிகச் சிறப்பாக ஆடினார்” என்றார்.