எதிர்வரும் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணி உள்கோப்பையை வெல்லுமா என்ற கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், 1983 ல் இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டனுமான கபில் தேவ் பதிலளித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசுகையில், "இந்திய அணியில் இளைஞர்களின் வேகமும், மூத்தவர்களின் அனுபவமும் ஒன்றாக அமைந்துள்ளது. இந்திய அணியில் ஒரு சமநிலை இருக்கிறது. அணியில் 4 வேகப்பந்துவீச்சாளர்கள், மூன்று ஸ்பின்னர்கள், அதற்கும் மேல் தோனி, கோலி என இரு பெரும் ஈடு இணையற்ற ஆளுமைகள் உள்ளனர். இங்கிலாந்து ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும். எனவே முகமது ஷமி, பும்ரா ஆகியோர் சிறப்பாக பந்துவீசுவார்கள். இப்போதைய சூழல்படி நிச்சயமாக நாம் அரையிறுதிக்குள் நுழைந்துவிடுவோம். ஆனால் அதன்பின் செல்வது தான் கடினம். அதற்கு சிறப்பான ஆட்டமும், சிறிது அதிர்ஷ்டமும் தேவை. தோனி மற்றும் கோலியின் ஆட்டம் இந்தியாவிற்கு மிக அவசியமாகும்" என தெரிவித்தார்.