துப்பாக்கி சுடும் போட்டியில் ஜீத்து ராய் தங்கம் வென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21ஆவது காமன்வெல்த் போட்டி கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 71 நாடுகள் பங்கு கொள்கின்றன. காமன்வெல்த் போட்டிகள் தொடங்கியதில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
பளுதூக்கும் போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் அதிகமாக தங்கப்பதக்கம் வென்றிருந்தனர். நேற்று டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்றது. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் தங்கப்பதக்கமும், ஹீனா சிந்து வெள்ளிப்பதக்கமும் வென்றிருந்தனர். அதேபோல், இந்தியாவின் மெஹூலி கோஸ் வெள்ளிப்பதக்கம் வென்று பெருமை சேர்த்தார். பளு தூக்கும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றது அனைவரையும் பெருமைகொள்ளச் செய்துள்ளது.
இந்நிலையில், 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ஜீத்து ராய் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். புள்ளிப்பட்டியலில் 235.1 எடுத்திருந்த அவர், ஆஸ்திரேலியாவின் கெர்ரி பெல் (233.5) என்பவரைத் தோற்கடித்தார். அதேபோட்டியில், இந்தியாவின் ஓம் மித்ரவாள் (214.3) வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம், இந்திய அணி 8 தங்கப்பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போதைய நிலையில் பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா 85 பதக்கங்களுடன் முதலிடத்திலும், 48 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன.