உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், 12வது லீக் ஆட்டம் 14ம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இது வரை பாகிஸ்தானிடம் தோற்றதே கிடையாது எனும் வரலாற்றை தக்க வைத்தபோதிலும், இந்தப் போட்டியில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் அணியினர் பேட்டிங்கில் இருந்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ என தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அதேபோல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் மீண்டும், ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’என கோஷம் எழுப்பினர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பினரும், விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். என தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து தனது சமூகவலைதளப் பக்கமான எக்ஸில், “இந்தியா அதன் விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. இருப்பினும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு நேர்ந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. விளையாட்டு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும், உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். வெறுப்பைப் பரப்பும் கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளமான எக்ஸ் ல், #Sorry_Pakistan எனும் ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் , ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’என கோஷம் எழுப்பியது தொடர்பாக, தங்களது கருத்துகளை #Sorry_Pakistan எனும் ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.