2022ஆம் ஆண்டின் காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய ஹாக்கி அணிகள் அந்த காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்காது என ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது. காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கும் இடையே 32 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஹாக்கி இந்தியா, ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்சுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் என்பதால், அந்த போட்டிகளுக்கு முன்பாக ஐரோப்பாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இங்கிலாந்திற்கு வீரர்களை அனுப்ப விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.
ஆனால், இந்தியாவில் வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஆடவருக்கான ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியிலிருந்து வெளியேறுவதாக இங்கிலாந்து அணி சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. கரோனா தொடர்பான கவலையையும், இங்கிலாந்து நாட்டவரை 10 நாட்கள் தனிமைப்படுத்தும் இந்திய அரசின் விதியையும் இந்த ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியிலிருந்து விலகுவதற்கான காரணமாக தெரிவித்திருந்தது.
இதற்குப் பதிலடி தரும் வகையிலயே காமன்வெல்த் போட்டிகளிலிருந்து இந்திய ஹாக்கி அணிகள் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.