இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளது.
இந்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் அடித்து இரண்டாம் நாள் ஆட்டத்திற்கு பிறகு டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய மாயங்க் அகர்வால் 243 ரன்கள் குவித்தார். அதேபோல ரஹானே 86, ஜடேஜா 60, புஜாரா 54 ஆகியோரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர்.
இதனையடுத்து மூன்றாம் நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி ஷமி மற்றும் அஸ்வின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. மளமளவென விக்கெட்டுகள் சரிந்த நிலையில் வங்கதேச அணி 69.2 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 4 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் சாய்த்தனர். இதன்மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார்.