இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்குபெறும் உலகக் கோப்பை இறுதி ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் நான்கு ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து ரோஹித் சர்மா மற்றும் கோலி இணை ஓரளவு அதிரடி காட்டியது. பவுண்டரிகள் சிக்ஸர்கள் என அதிரடி காட்டிய ரோஹித் வழக்கம்போல சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு 47 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ஸ்ரேயாசும் நான்கு ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
பின்னர் கோலியுடன் இணைந்த ராகுல் அணியை சரிவிலிருந்து மீட்டார். அரை சதம் கடந்த கோலி எதிர்பாராத விதமாக 54 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஜடேஜா 9 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். பின்னர் ராகுலும் அரை சதம் கடந்து 66 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டெயிலெண்டர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரிய குமாரும் 18 ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் மற்றும் ஜாம்பா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இரண்டு ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் ஷமி பந்து வீச்சில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.