துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மெஹூலி கோஸ் நூலிழையில் தங்கப்பதக்கத்தைத் தவறவிட்டார்.
21ஆவது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர்கள் சிறப்பாக விளையாடி பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் தங்கப்பதக்கமும், ஹீனா சிந்து வெள்ளிப்பதக்கமும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர்.
இந்நிலையில், 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 17 வயதே ஆன மெஹூலி கோஸ், சிறப்பாக ஆடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தார். கடும் போட்டி நிலவிய இறுதிச்சுற்றில் அவர் சிங்கப்பூரின் மார்ட்டினா லிண்ட்சே வெலோசோவுடன் மோதினார். இதில் இருவருமே 247.2 புள்ளிகள் எடுத்திருந்ததால் ஆட்டம் ட்ராவில் நின்றது. 247.2 புள்ளிகள் எடுத்தது காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டிகளில் புதிய சாதனை ஆகும்.
இதையடுத்து நடத்தப்பட்ட பெனால்டி சுற்றில், மார்ட்டினா 10.3 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். மெஹுலி கோஸ் 9.9 புள்ளிகளே பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார். வெறும் 0.4 புள்ளிகளில் தங்கப்பதக்கத்தை இழந்திருந்தாலும், மெஹூலி நிகழ்த்திய சாதனை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதேபோட்டியில், இந்தியாவின் அபூர்வி சாண்டிலா வெண்கலப் பதக்கம் வென்றார்.