உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானம் இருந்து வந்தது. இந்த மைதானத்தில், ஒரு லட்சத்து இருபத்து நான்கு பேர் அமர்ந்து போட்டியைப் பார்க்கலாம். ஆனால், தற்போது உலகின் மிகப் பெரிய மைதானம் என்ற பெருமையை, இந்தியாவின் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் கைப்பற்றியுள்ளது.
குஜராத் மாநிலத்தில், 800 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில், ஒருலட்சத்து பத்தாயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இந்த மைதானத்தை, இந்தாண்டு தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடியோடு இணைந்து தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு, கரோனா தொற்றுப் பரவலால், பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், இந்தியாவில் சர்வதேசப் போட்டிகள் நடைபெறவில்லை. ஆதலால், இந்த மைதானத்திலும் இதுவரை போட்டிகள் நடைபெறவில்லை. இந்தநிலையில், இந்தியாவில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், இந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில், உள்விளையாட்டு அகாடமியை தொடங்கி வைத்த அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த உள்விளையாட்டு அகாடமி திறப்பு விழாவின்போது, நேற்று ஓய்வை அறிவித்த பார்த்திவ் படேல், இந்தியா மற்றும் குஜராத் அணிகளுக்கு ஆற்றிய பங்களிப்புக்காகக் கவுரவிக்கப்பட்டார்.