இந்தியா - வங்கதேசம் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி ஐதராபாத்தில் இன்று (12.10.2024) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா இணை களமிறங்கியது. அதில் அபிஷேக் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்ததாகக் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினார். இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் 10வது ஓவரில் தொடர்ந்து தொடர்ந்து 5 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். மேலும் டி20 போட்டியில் அதிவேகமாக (40 பந்துகள்) சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் சஞ்சு சாம்சன் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 297 ரன்களை குவித்தது. இதன் மூலம் வங்கதேச அணிக்கு 298 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. இருப்பினும் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 167 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி வங்கதேச அணியை 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா, வங்கதேச அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. போட்டியின் ஆட்டநாயகனாக அஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.
அதே சமயம் சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் (297) எடுத்த இரண்டாவது அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்தது. முதலிடத்தில் நேபாளம் உள்ளது. இந்த அணி மங்கோலியாவுக்கு எதிராக 314 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் இரண்டாவது ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.