டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து நவம்பரில் இறுதி முடிவெடுக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது, 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 9 நாடுகள் இத்தொடரில் பங்கெடுத்து வருகின்றன. இத்தொடரின் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன. இறுதிப்போட்டியை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடத்த ஐசிசி திட்டமிட்டிருந்தது. தற்போது கரோனா காரணமாக பல டெஸ்ட் தொடர்கள் ஒத்தி வைக்கப்பட்டதால், திட்டமிட்டபடி இறுதிப்போட்டியை நடத்துவதில் சிக்கல் எழுந்தது.
இந்நிலையில், "நவம்பர் மத்தியில் கூட இருக்கிற உயர்மட்டக் குழுவில் இது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. அதன்பின்னரே இந்த விஷயத்தில் தெளிவான விவரங்கள் தெரியவரும்" என ஐசிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ரத்தான தொடர்களுக்கு புள்ளிகள் பகிர்ந்து அளிப்பதா அல்லது விளையாடிய போட்டிகளுக்கு மட்டும் புள்ளிகள் வழங்கி தரவரிசைப்பட்டியலை இறுதி செய்வதா என அக்கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடத்த திட்டமிட்டுள்ள இறுதிப்போட்டியில் எந்த மாற்றமும் இருக்காது என சில தினங்களுக்கு முன்னால் ஐசிசி தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.