ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி, பாகிஸ்தானில் தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி இலங்கையில் நிறைவு பெறுகிறது. போட்டிக்கான 17 இந்திய அணி வீரர்கள் கொண்ட பட்டியலை திங்களன்று பி.சி.சி.ஐ வெளியிட்டது. இந்த அறிவிப்பு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தலைமையில், செய்தியாளர் சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டது. ஆசிய கோப்பை முடிந்ததும் அக்டோபர் 5 ஆம் தேதி ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை போட்டி துவங்க இருக்கிறது.
இதற்கிடையில் பட்டியலில் சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர் மற்றும் பேட்ஸ்மென் ஷிகர் தவான் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இந்த செய்தி கிரிக்கெட் வட்டாரங்களில் பல கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியது.
இந்த விமர்சனங்களுக்கெல்லாம் முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பதில் அளித்துள்ளார். இந்த சர்ச்சைகள் குறித்து அவர் தெரிவித்ததாவது, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் மிகவும் சமநிலையானது. அஸ்வின் அணியில் இடம்பெறாததை கேள்வி எழுப்பிய ரசிகர்கள், அவர் ஏன் இல்லை என்று கேட்பதற்கு பதிலாக, இந்திய அணியை ஆதரிப்போம். ஏனெனில் தற்போது இது எங்கள் அணி. இருந்தும் பட்டியலில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால் போட்டியைப் பார்க்க வேண்டாம். நிச்சயமாக இந்த பட்டியலில் உள்ள இந்திய அணியால் உலகக் கோப்பையை வெல்ல முடியும். இவர்களைவிட வேறு யாரைத் தேர்ந்தெடுத்திருப்பீர்கள்? தேர்வாளர் தனக்கு அநீதி இழைத்துவிட்டார் என்று எந்த வீரரும் கூற முடியாது. அனுபவம் வாய்ந்த ஃபார்மில் உள்ள 17 வீரர்கள் ஆசிய கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என்று கவாஸ்கர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கே.எல். ராகுல் தேர்வு செயப்பட்டதையும் கவாஸ்கர் ஆதரித்து, “அவரது காயத்தின் நிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். போட்டி ஆரம்பமாக இன்னும் 11 நாட்கள் உள்ளன. நிச்சயம் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு இதுவே போதுமானது. ஆசியக் கோப்பையை வெல்வது முக்கியம். அதே சமயம் உலகக் கோப்பை தான் பிரதான இலக்கு. எனவே உலகக் கோப்பை அணியில் கே.எல். ராகுலை சேர்க்க அணி நிர்வாகம் விரும்பியிருந்தால், அவரை ஆசிய கோப்பைக்கு தேர்வு செய்தது சரிதான். இந்தத் தருணம் ராகுல் மீண்டு வருவதற்குத் தகுந்தது" என்று கவாஸ்கர் கூறினார்.
ஒருபக்கம் இந்திய அணி பட்டியல் குறித்தான கருத்துகள் பரவி வருகிறது. இந்நிலையில் அஷ்வின் தனது யூடுப் சேனலில், இந்திய அணியை பற்றிய முழு அலசல் காணொளியை நேற்று பதிவிட்டிருந்தார். அந்த காணொளியில் இந்திய அணி வீரர்களின் பலம், பௌலிங்கில் மேற்கொள்ள போகும் யுக்தி என்பன போன்று பாஸிட்டிவாக பேசியுள்ளார். இந்த முறை தேர்வு செய்யப்பட்ட அணி சம நிலையாக உள்ளது எனவே நிச்சயம் ஒரு நல்ல முயற்சியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். நிகழ்ந்து வரும் விமர்சனங்கள் குறித்து காணொளியில் எந்தவொரு கருத்துகளையும் அவர் தெரிவிக்கவில்லை.