ஐபிஎல் - 2024 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி அண்மையில் வாங்கியிருந்த நிலையில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பை பெற்றுக் கொடுத்த ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து விடுவித்து ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக அறிவித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம், ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வந்தது.
இதனிடையே, சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணிக்காக விளையாடியபோது ஹர்திக் பாண்டியாவின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் தொடர்ந்து விளையாட முடியாமல் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார். இந்த காயம் காரணமாக வரும் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியா பங்கேற்கமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் சரியாக இன்னும் சில மாதங்கள் எடுக்கும் நிலையில், வருகின்ற ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. தற்போது ஹர்திக் பாண்டியா விலகும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவே செயல்படுவாரா? அல்லது சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.