ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் பேசுகையில், "போட்டி இந்தியாவிற்கு சாதகமாக அமையவில்லை. இந்திய அணி நன்றாகத்தான் விளையாடியது. நிறைய தவறான ஃபீல்டிங், கேட்ச் தவறவிடுவது என ஃபீல்டிங் சற்று மந்தமாக அமைந்துவிட்டது. சர்வதேச போட்டிகளில் உங்களை நோக்கி வரும் ஒவ்வொரு பந்தையும் நீங்கள் கேட்ச் செய்யவேண்டும். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. ஃபீல்டர்கள் களத்தில் பவுலர்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அது பவுலர்களுக்குத்தான் கஷ்டமாக அமையும். அதுதான் இங்கு நடந்தது. முகமது ஷமி தவிர யாரும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. ஆஸ்திரேலியாவில் விளையாடும் முதல் போட்டியெனும்போது, அங்குள்ள சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டும். அதை இந்திய வீரர்கள் செய்யாததே ஆஸ்திரேலிய அணி அதிக ரன்கள் சேர்த்ததற்கு ஒரு காரணம். இது இந்திய அணியின் சேசிங்கை பலவீனப்படுத்திவிட்டது" எனக் கூறினார்.