16 ஆவது ஐபிஎல் சீசனின் 51 ஆவது லீக் போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 227 ரன்களைக் குவித்தது. சஹா 81 ரன்களையும் கில் 94 ரன்களையும் குவித்தனர். லக்னோ அணியில் 8 பவுலர்கள் பந்து வீசியும் குஜராத் அணியின் ரன் வேட்டையை தடுக்க முடியவில்லை.
228 ரன்கள் இலக்கினைக் கொண்டு களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக மேயர்ஸ் 48 ரன்களையும் டிகாக் 70 ரன்களையும் அடித்தனர். பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணியில் மோஹித் சர்மா 4 விக்கெட்களையும் நூர் அஹமது, ரஷித் கான், ஷமி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்றைய போட்டியில் குஜராத் அணி பவர் ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்களை எடுத்தது. இதுவே அந்த அணியின் அதிகபட்ச பவர்ப்ளே ஸ்கோராகும். விருத்திமான் சஹா குஜராத் அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த வீரரானார். இன்றைய போட்டியில் அவர் 20 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.
இன்றைய போட்டியில் சஹா - கில் இணை 142 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இது நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக அமைந்துள்ளது. இன்றைய போட்டியில் குஜராத் அணி 227 ரன்களைக் குவித்ததே குஜராத் அணியின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கில் 10 இன்னிங்ஸில் விளையாடி 526 ரன்களைக் குவித்துள்ளார். அவரது சராசரி 75.14 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 152.46 ஆகவும் உள்ளது. லக்னோ அணி வீரரான தீபக் ஹூடா நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 17. எஞ்சிய போட்டிகளில் பெரும்பாலும் ஒற்றை இலக்கில் அவுட் ஆனார்.
லக்னோ அணி 13 போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்து அதில் 4 போட்டிகளில் மட்டுமே எதிரணி நிர்ணயித்த ரன்னை சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 9 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் நான்கு போட்டியில் 3ல் வெற்றி பெற்ற லக்னோ அணி அடுத்த 7 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் ஆட்ட நாயகனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார்.