கடவுள் தங்களை உலகக்கோப்பையில் இருந்து வெளியேற விடமாட்டார் என அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி உற்சாகமாக பேசியுள்ளார்.
ரஷ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், மெஸ்ஸி தலைமையிலான கால்பந்து அணி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கியது. டி பிரிவில் இருக்கும் அர்ஜெண்டினா, ஐஸ்லாந்து அணியுடன் மோதிய முதல் போட்டியில் 1 - 1 என்ற கோல்கணக்கில் டிரா ஆனது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி பெனால்டி கிக்கைத் தவறவிட்டது பலராலும் விமர்சிக்கப்பட்டது. அதேபோல், குரோஷியா உடனான இரண்டாவது போட்டியில் அர்ஜெண்டினா மிகவும் மோசமாக செயல்பட்டதாக பலரும் கருத்து தெரிவித்தனர். அந்தப் போட்டியில் குரோஷியா 3 - 0 கோல்கணக்கில் வெற்றிபெற்றது.
இதன்மூலம் வெறும் 1 புள்ளியுடன் இருந்த அர்ஜெண்டினா அணி, நைஜீரியா உடனான போட்டியில் ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதேபோல், அந்தப் போட்டியில் அர்ஜெண்டினா 2 - 1 என்ற கணக்கில் வெற்றிபெற்று, டாப் 16க்குள் நுழையும் வாய்ப்பைப் பெற்றது. இந்த வெற்றி குறித்து பேசிய லியோனல் மெஸ்ஸி, இதுபோன்ற பதற்றமான போட்டியை என் வாழ்க்கையில் விளையாடியதே இல்லை. இதனால், அனைவரும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும், கடவுள் தங்கள் அணியை தொடரில் இருந்து வெளியேற்றமாட்டார் என உற்சாகமாக தெரிவித்துள்ளார்.