இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது வெடித்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்திய அணியின் அதிரடி வீரரான ரோகித் ஷர்மா பெயர் மூன்று தரப்பட்ட அணிகளிலும் இடம்பெறாததையடுத்து மிகப்பெரிய விவாதம் கிளம்பியது. அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் மட்டும் ரோகித் ஷர்மா சேர்த்துக்கொள்ளப்பட்டார். இவ்விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் காத்து வந்த ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி தங்கள் மௌனத்தைக் கலைத்தனர். இது குறித்து இருவரும் விளக்கமளித்த நிலையில், விராட் கோலி அளித்த விளக்கம் கூடுதல் விவாத்தைக் கிளப்பியுள்ளது.
விராட் கோலி இந்த விவகாரம் குறித்து பேசும்போது 'ரோகித் ஷர்மாவின் காயத்தின் தன்மை குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறினார். இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் இது குறித்துப் பேசுகையில், "இது துரதிர்ஷ்டம். விராட் கோலி அணியின் கேப்டன். பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் ரோகித் ஷர்மாவின் காயத்தின் தன்மை குறித்து எனக்கு தெரியவில்லை எனக் கூறுகிறார். தலைமை மருத்துவர், பயிற்சியாளர், தேர்வுக்குழுத்தலைவர் ஆகியோர் அணியில் முக்கியமானவர்கள். பயிற்சியாளர் ரோகித் ஷர்மாவின் காயம் குறித்து விராட் கோலியிடம் நிச்சயம் கூறியிருப்பார். ரோகித் ஷர்மா அணியில் முக்கியமான வீரர். அனைவருக்கும் இடையே நல்ல தகவல் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைவு இருந்திருக்கலாம். ஆனால், இது எங்கோ குறைகிறது" எனக் கூறினார்.