Skip to main content

பிரிவு உபசார போட்டி விளையாடாமல் விடை பெற்ற நட்சத்திர வீரர்கள்...

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

தனக்கு பிரிவு உபசார போட்டி கிடைக்காதது குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார் அதிரடிக்கு பெயர்போன சேவாக்.
 

yuvi

 

 

“யுவராஜ் சிங்குக்கு கண்டிப்பாக பிரிவு உபசார போட்டி நடத்தியிருக்க வேண்டும்” என்று சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங்கிற்கு முன்பும் நாட்டிற்காக பல ஆண்டு காலம் விளையாடிய உலகின் பல நட்சத்திர வீரர்கள் பல விதமான காரணங்களால் பிரிவு உபசார போட்டி விளையாடாமல் விடை பெற்றுள்ளது அவர்களுக்கும், அவர்களது ரசிகர்களுக்கும் ஒரு வடுவாக இருந்து கொண்டே இருக்கும். சிலர் இது தான் கடைசி போட்டி என்பதை அறியாமலேயே அந்த போட்டியை விளையாடி விட்டு பின்னர் ஓய்வை அறிவித்தனர்.
 

ராகுல் டிராவிட்:
விளையாடும் காலத்தில் இவரது அருமை பெரிதாக போற்றப்படவில்லை. என்றும் இந்திய கிரிக்கெட்டின் தியாக உள்ளம் இவர் தான். லக்ஸ்மன், டிராவிட் இருவருக்கும் 24, ஜனவரி, 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா உடனான போட்டி தான் கடைசி போட்டி. தனது ஓய்வை அதே ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தார்.
 

வீரேந்திர சேவாக்:
தனக்கு பிரிவு உபசார போட்டி கிடைக்காதது குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார் அதிரடிக்கு பெயர்போன சேவாக். தனது பிறந்தநாளான அக்டோபர் 20, 2015-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். கடைசியாக 2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடினார். 
 

கவுதம் கம்பீர்:
இந்தியா வென்ற 2007, 2011 என இரு உலகக்கோப்பை தொடரிலும் அணிக்கு சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தார். அணியில் சரியாக இடம் கிடைக்காமல் இருந்து வந்தார். 2016-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி போட்டியில் விளையாடினார். பின்னர் டிசம்பர் 3, 2018-ஆம் ஆண்டு அனைத்து வித போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.  
 

வி.வி.எஸ். லக்ஸ்மன்:
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கிடைத்த ஆகச்சிறந்த வீரர். கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 24, ஜனவரி, 2012-ஆம் ஆண்டு விளையாடினார். பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது ஓய்வை அறிவித்தார். 
 

ஜாகிர் கான்:
லென்த், இன் ஸ்விங், அவுட் ஸ்விங், யார்க்கர் என பேட்ஸ்மேன்களை திணறடித்த இந்தியா உருவாக்கிய சிறந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர். கடைசியாக 2014-ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடினார். பின்னர் 2015-ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். 
 

டுவைன் பிராவோ:
உலகில் எல்லா நாடுகளிலும் நடைபெறும் டி20 தொடரில் இவர் தான் ஹீரோ. தனது டான்ஸ் மூலம் மைதானத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். 2016-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி டி20 போட்டியில் விளையாடினார். பின்னர் அக்டோபர், 2018-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்தார். 
 

முஹம்மது அசாருதீன்:
இந்திய அணிக்கு கேப்டனாகவும், நட்சத்திர பேட்ஸ்மேனாகவும் பல போட்டிகளில் வெற்றியை தேடித்தந்தவர். மேட்ச் பிக்ஸிங் காரணமாக அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 2000-ஆம் ஆண்டில் தனது கடைசி டெஸ்ட் போட்டியை பெங்களூரில் விளையாடினார். 
 

ஏ பி டி வில்லியர்ஸ்:
 

abd

 

 

உலகம் முழுவதும் தனது அதிரடி பேட்டிங், மாஸ் பீல்டிங், புன்னகை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஏபிடி. சிறந்த ஃபார்மில் இருக்கும்போதே மே, 2018-ஆம் ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார். கடைசி போட்டியாக மார்ச், 2018-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடினார். 
 

சுனில் கவாஸ்கர்:
80-களில் சூப்பர்ஸ்டாராக இருந்த கவாஸ்கர் பேட்டிங் மூலம் உலக நாடுகள் அனைத்திலும் கொடிகட்டி பறந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 1987-ஆம் ஆண்டு கடைசி போட்டியில் விளையாடினார். 
 

மார்க் வாக்:
ஆஸ்திரேலியா அணியில் மிடில் ஆர்டர், ஓப்பனிங் என பேட்டிங்கில் கலக்கி வந்தார். 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் அணியில் இடம்பெறவில்லை. பிறகு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். கடைசி போட்டியாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக அக்டோபர், 2002-ஆம் ஆண்டு விளையாடினார். 
 

ஜவகல் ஸ்ரீநாத்:
கபில் தேவிற்கு பிறகு ஸ்ரீநாத் இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக விளங்கினார். 2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு தனது ஓய்வை அறிவித்தார். 
 

மார்க் பௌச்சர்:
தென் ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் பௌச்சர் ஜூலை, 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்து உள்ளூர் போட்டியில் கீப்பிங் செய்யும் போது பைல்ஸ் பட்டு இடது கண் பாதிக்கப்பட்டது. அப்போதே தனது ஓய்வை அறிவித்தார். கடைசி போட்டியாக ஜனவரி, 2012-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக விளையாடினார்.     
 

ஷிவ்நாரன் சந்தர்பால்:
வெஸ்ட் இண்டீஸ் அணியில் 21 ஆண்டுகளாக டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என இரண்டிலும் அணிக்கு தூணாக இருந்தவர். அணி நிர்வாகம் இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் கட்டாயப்படுத்தி 2016-ஆம் ஆண்டு இவரை ஓய்வு பெற வைத்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 2015-ஆம் ஆண்டு கடைசி போட்டியில் விளையாடினார். 
 

வக்கார் யூனிஸ்:
2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பாகிஸ்தானின் தோல்வியின் காரணமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் 2004-ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார்.  
 

கெவின் பீட்டர்சன்:
இங்கிலாந்து அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான பீட்டர்சன் 2014-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2018-ஆம் ஆண்டு அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். 
 

மைக்கேல் வாகன்:
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் வாகன் கடைசி போட்டியை 2008-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடினார். பின்னர் அணியில் இடம் பெறாமல் தனது ஓய்வு முடிவை ஜூன், 2009-ஆம் ஆண்டு அறிவித்தார்.