பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமாலுக்கு ஒரு போட்டியில் விளையாட ஐசிசி தடைவிதித்துள்ளது.
மேற்கிந்தியத்தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அந்த அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபாரமாக வெற்றிபெற்றது. பின்னர் செயிண்ட் லூயிஸில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின்போது இலங்கை வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக நடுவர்கள் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து, பந்தை மாற்ற நடுவர்கள் முடிவெடுத்தபோது, இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை வீரர்கள் களத்திற்கு வர மறுத்தனர். இந்நிலையில், தாமதமாக தொடங்கிய போட்டி பின்னர் டிராவில் முடிந்தது.
இந்நிலையில், பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐசிசி முன்னரே எச்சரித்தது. இதையடுத்து, இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமாலுடன் போட்டி நடுவர் நடத்திய விசாரணையில், அவரது முன்னுக்குப் பின் முரணான பதில்கள், அவர் குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானது. பந்தை எச்சிலோடு சேர்த்து வேறு ஏதோவொரு பொருளால் சேதப்படுத்தி, பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்திருப்பது இதன்மூலம் நிரூபணமானது. தற்போது, இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதித்தும், போட்டி ஊதியத்தில் 100 சதவீதத்தை அபராதமாக விதித்தும் ஐசிசி உத்தரவிட்டுள்ளது.