ஐ.பி.எல். சீசன் 11க்கான ஏலம் நிறைவடைந்த போது அதிகம் விமர்சிக்கப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. டெஸ்ட் பேட்டிங் ஆடும் தோனி, வீரர்கள் எல்லோரும் 30 வயதைக் கடந்தவர்கள், அங்கிள்ஸ் டீம் என பலவிதமாக முன்வைக்கப்பட்ட கலாய்ப்புகளை, சீசனின் தொடக்கத்திலேயே முறியடித்தது அந்த அணி.
இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு களத்திற்கு வந்திருக்கும் அந்த அணி, மீண்டும் கோப்பையை வெல்லும் கனவுகளோடு சிறப்பாக ஆடியது. ஒவ்வொரு அணியிலும் ஒரு குறிப்பிட்ட வீரர் மட்டுமே வெற்றிக்கான வேகத்தைத் தரவேண்டிய கட்டாயம் இருந்தபோது, சென்னை அணியில் மட்டும் ஒவ்வொரு போட்டியிலும் ஒருவர் களத்திற்கு சென்று வெற்றியைப் பெற்றுத்தந்தார். ஒருவழியாக லீக் சுற்றில் இரண்டாம் இடத்தைப் பிடித்த சென்னை அணி, தகுதிச்சுற்றிலும் வெற்றிபெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இதையடுத்து, நேற்று பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் நடைபெற்ற இறுதிப்போட்டியில், அசால்ட்டாக வெற்றிபெற்று கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
Everywhere we go! We are the Chennai Boys and we are the #SuperChampions! #WhistlePodu pic.twitter.com/iVqQnMeXAi
— Chennai Super Kings (@ChennaiIPL) May 27, 2018
தொடர்ந்து வெற்றிக்கோப்பையை எடுத்துச்சென்று ‘சாம்பியன்ஸ்’ போஸ் கொடுப்பதற்காக அனைவரும் தயாரானபோது, வீரர்கள் அவரவர் குழந்தைகளைக் கூட்டிச்சென்று அழகாக போஸ் கொடுத்தனர். பின்புறம் தோனி தனது மகள் ஜிவாவுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தார். வெற்றிக் களிப்பை தங்கள் குழந்தைகளுடன் கொண்டாடித் தீர்த்த அப்பாக்கள் ஆர்மியின் அந்த தருணம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.