ஐ.பி.எல். சீசன் 11 நிறைவுக்கட்டத்தை எட்டிவிட்டது. இரண்டு ஜாம்பவான் அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. மூன்றாவது முறையாக கோப்பையை சென்னை அணி வெல்லுமா அல்லது நான்காவது தோல்வியை ஐதராபாத் அணி தவிர்க்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதற்கிடையில், ராஜஸ்தான் அணியின் மென்டராக இருந்தவரும், உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களின் ஒருவருமான ஷேன் வார்னே, இந்த சீசனில் தனது ட்ரீம் 11 அல்லது ‘ஆல் ஸ்டார்ஸ்’ அணியை தேர்வு செய்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஃப்ளே ஆஃப் நம்பிக்கை ஊட்டி, தொடர்ந்து ஐந்து அரை சதங்கள் விளாசிய ஜாஸ் பட்லர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரமும், இந்த சீசனின் சிறந்த ஓப்பனருமான கே.எல்.ராகுல் ஆகியோர் ஓப்பனர்களாக இருப்பர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு மிகச்சிறந்த சீசனாக இது இல்லை என்றாலும், 530 ரன்கள் விளாசிய அவர் மூன்றாவது ஆளாக களமிறங்குவார்.
குட்டியாக இருந்தாலும் அதிரடியாக ஆடி ஒரு சதம், ஐந்து அரை சதங்கள் விளாசி உலக ஜாம்பவான்களை வாய்ப்பிளக்க வைத்த ரிஷப் பாண்ட். விமர்சனங்களைத் தவிடு பொடியாக்கி மீண்டும் பெஸ்ட் ஃபினிஸர், பெஸ்ட் ஃபார்ம், பெஸ்ட் கேப்டன் என ஜொலிக்கும் தோனி இந்த அணியின் கேப்டனாக இருப்பார்.
ஆல்ரவுண்டர்களாக கொல்கத்தா அணியின் ஆண்ட்ரே ரஸ்ஸெல் மற்றும் மும்பை அணியின் ஹர்தீக் பாண்டியாவும் செயல்பட, ஸ்பின்னர்களாக ரஷீத் கான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாடுவார்கள். வேகப்பந்து மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட ஆண்ட்ரூ டை மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரை தேர்வு செய்துள்ளார் வார்னே.
அதுபோக, இன்று நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றிபெறும் எனவும், அதற்கான வாய்ப்புகளை அந்த அணியின் சமீபத்திய ஆட்டமே நிரூபித்திருக்கிறது எனவும் வார்னே குறிப்பிட்டுள்ளார்.