13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு நீண்ட நாட்களுக்குப் பின் தொடர் தொடங்கியதால், இது குறித்தான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது. அதை நிவர்த்தி செய்யும் விதமாக ஒவ்வொரு போட்டியிலும் அதிரடிக்கும், விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லை. நாள்தோறும் புதிய புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. மேலும், பல வீரர்கள் புதிய சாதனை படைப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். அந்த வகையில் மும்பை அணியின் கேப்டனான ரோகித் ஷர்மா அடுத்து வரும் போட்டிகளில் ஒரு அரை சதம் அடிப்பதன் மூலம் புதிய சாதனை படைக்க உள்ளார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை 193 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் ஷர்மா 38 அரை சதங்கள் அடித்துள்ளார். சென்னை அணியின் நட்சத்திர வீரரான ரெய்னாவும் 193 போட்டிகளில் விளையாடி 38 அரை சதங்கள் அடித்துள்ளார். இரு வீரர்களும் அதிக அரை சதங்கள் அடித்த வீரர்கள் எனும் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துள்ளனர். ரோகித் ஷர்மா இன்னும் ஒரு அரை சதம் அடிக்கும் பட்சத்தில், ஐபிஎல் தொடரில் 39 அரை சதங்களுடன் அதிக அரை சதங்கள் அடித்த வீரர்கள் என்னும் பட்டியலில் இரண்டாம் இடத்தை தனித்துப் பிடிப்பார். ஹைதராபாத் அணியின் கேப்டனான டேவிட் வார்னர் 45 அரை சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.