Skip to main content

தோனியை ஏமாற்றிய சென்னை...திருப்தியளிக்குமா டெல்லி... சிஎஸ்கே vs டிசி

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

12வது ஐபிஎல் தொடர் கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி , ஆர்சிபியுடன் முதல் மேட்ச் ஆடியது. ஆடிய முதல் போட்டியிலேயே வெற்றியை சுவைத்துள்ளது சிஎஸ்கே. இந்த தொடரில் நான்கு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இன்று சிஎஸ்கேவும், டெல்லி கேபிடல்ஸும் தங்களுடைய இரண்டாவது ஆட்டத்தை ஆட உள்ளனர். சிஎஸ்கே முதல் போட்டியில் வெற்றியடைந்ததை போலவே டெல்லி கேபிடல்ஸ் அணியும் ஆடிய முதல் மேட்சில், மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது.  இவ்விரு அணிகளும் ஏற்கனவே ஆடிய முதல் போட்டியில் வெற்றிவாகை சூடியுள்ளதால் இன்று நடைபெறும் போட்டிக்கு ரசிகர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. 
 

csk

 

 

இரவு 8:00 மணிக்கு டெல்லியிலுள்ள  ‘ஃபெரோஸ் கோட்லா’ மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த வருடம் தன்னுடைய சொந்த மைதானத்தில் முதல் மேட்ச் விளையாடுகிறது. சிஎஸ்கே அணியும் இந்த வருட ஐபிஎல் தொடரின் வலிமையான அணியாக இருக்கிறது. தன்னுடைய முதல் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றிருந்தாலும், அந்த அணியின் பேட்டிங்கை ஆர்சிபி உடனான மேட்சில் சரியாக பார்க்க முடியவில்லை. இன்று நடைபெறும் மேட்சில் கண்டிப்பாக அதை பார்க்க முடியும். ஏனென்றால் டெல்லி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. அதைபோன்றே சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசவும் ஏற்றது என்று சொல்லப்படுகிறது. ஆனாலும், சென்னை மைதானத்தை போல ஸ்பின்னர்கள் ஆட்சி செய்ய முடியாது. ஒரளவிற்கு ஸ்பின்னர்களுக்கு பந்து சுழலும் என்பதால் இவ்விரு அணிகளின் ஸ்பின்னர்களுக்கும் இன்று சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் டெல்லி அணியில் ட்ரெண்ட் பவுல்ட்டை அணியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக நேப்பாலை சேர்ந்த சந்தீப் லமிச்சானேவை (லெக் ஸ்பின்னர்) அணியில் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கேவின் முந்தைய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஹர்பஜன் சிங், அவருடைய சூழலில்தான் ஆர்சிபி வீழ்ந்தது. சென்னை பிட்சை போல டெல்லி பிட்சும் சுழற்பந்து வீச தகுந்தது என்பதால் ஹர்பஜனுக்கு இன்றும் வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 

இவ்விரு அணிகளும் கடந்த முறை டெல்லியில் சந்தித்துக்கொண்டபோது முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இதுவரை சென்னை, டெல்லி அணிகள் ஃபெரோஸ் கோட்லா மைதானதில் ஆறு முறை மோதியுள்ளது. அதில் 4 போட்டிகள் சிஎஸ்கேவும், 2 போட்டிகள் டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமாக இந்த  இரு அணிகளும் நேருக்கு நேராக 18 போட்டிகள் விளையாடியுள்ளன. அதில் 12 போட்டிகளில் சிஎஸ்கேவும், 6 போட்டிகளில் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளனர். 
 

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கடந்த மேட்சில் பேட்டிங் விளையாடவில்லை என்றாலும் இதற்கு முன்பு விளையாடிய சர்வதேச மேட்சுகளில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பப்படுகிறது. யாராலும் கணிக்கவே முடியாத ஒரு பேட்ஸ்மேனாக இருப்பவர் டெல்லி அணியின் ரிஷப் பண்ட்தான். ஒரு மேட்சில் கண்ணாபின்னாவென்று அடித்தாலும், அடுத்த மேட்சில் உறுதியாக அவர் அடிப்பார் என்று சொல்ல முடியாது. அதனால் இன்றைய மேட்சில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேபோல கிறிஸ் மோரிஸ் டெல்லி அணிக்கு திரும்புகிறாரா என்று எந்த அறிவிப்பும் இல்லை. முந்தைய மேட்சில் ஆடியவர்களே இன்று நடைபெறும் மேட்சில் ஆடுவார்கள் என்று எண்ணப்படுகிறது. 
 

dc

 

 

சென்னை மைதானத்தை ஸ்லோ ட்ராக்கா மாற்றியதற்கு தோனி கடுமையாக விமர்சித்தார். ‘ஐபிஎல் என்பதே பேட்டிங்கான போட்டி, அதனால் பிட்சுகளும் அவ்வாறு பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றார்போல இருந்திருக்க வேண்டும்’  என்றார். தோனி சொன்னதுபோன்ற ஆடுகளமாக டெல்லி ஆடுகளம் இருப்பதால் தோனிக்கு இது வரப் பிரசாதமாக இருக்குமா என்பதை இன்று இரவு தெரிந்துவிடும். டெல்லி அணி முழுக்க இளைஞர்கள் உள்ள அணியாக துடிப்பான ஒரு அணியாகவும் இருக்கிறது. சென்னை அணி மிகவும் அனுபவம் வாய்ந்த அணியாக உள்ளது. இதுவரை டெல்லி அணி நல்ல டீமாக இருந்தாலும், டீமில் நிலையான தன்மையில்லாமல் இருந்தது. ஆனால், மும்பையுடன் அவர்கள் விளையாடியதை பார்த்தபோது இளம் அணியில் அனுபவத்தை சேர்த்து விதைத்திருக்கிறார் டெல்லியின் புதிய கோச் ரிக்கி பாண்டிங் என்று தெரிகிறது. ரிக்கி மட்டுமின்றி கங்குலியும் மெண்டராக இருப்பதால் டெல்லி அணி மீது பலரின் கண்கள் உள்ளது.  ரிக்கி, கங்குலி ஆகியோர் வெளியே இருந்துதான் டெல்லி அணியை பார்த்துகொள்ள முடியும் ஆனால் சிஎஸ்கேவில் தோனி மைதானத்திற்குள் இருந்தே பார்த்துகொள்வதால் மேலும் சிஎஸ்கேவுக்கு கூடுதல் பலமாக இருக்கிறது. பேட்டிங்கு சாதகமாக இருக்கும் ஃபெரோஸ் கோட்லா மைதானத்தில் இன்று என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்.