இன்றிரவு நடைபெற்ற 15வது ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 3வது வெற்றியைப் பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கட்டுகள் இழப்புக்கு 220 ரன்களைக் குவித்தது. சென்னை அணியின் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபாஃப் டு பிளெஸிஸ் ஆகிய இருவருமே ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டினர். ருத்துராஜ் கெய்க்வாட் 42 பந்துகளில் 64 ரன்களை குவித்த நிலையில் அவுட்டானார். மொயீன் அலி 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். தோனி 17 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் வரை சேமித்தார் டு பிளெஸிஸ். 20 ஓவர் முடிவில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 221 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சி.எஸ்.கே.
221 ரன்களை வெற்றி இலக்காக வைத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி அளித்தார் தீபக் சாஹர். அவர் தனது முதல் ஓவரிலேயே சுப்மன் கில்லை டக் அவுட் செய்தார். அடுத்தடுத்து வரும் பேட்ஸ்மேன்களால் நிலையான ஆட்டத்தை தரமுடியவில்லை. முதல் 6 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. மிகவும் சோர்வாகக் காணப்பட்ட கொல்கத்தா அணியை, கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் கூட்டணி உற்சாகப்படுத்தியது. அரை சதம் அடித்து உற்சாகத்தில் இருந்த ரசல்லை, சாம்கரன் போல்ட் ஆக்கினார். இதன்பின்னர் தினேஷ் கார்த்திக்கும் பாட் கம்மின்ஸ்ஸும் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர்.
சாம் கரண் வீசிய 16வது ஓவரில் பாட் கம்மின்ஸ் அசுரத்தனமாக ஆடினார். தொடர்ச்சியாக 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என அந்த ஓவரில் மட்டும் 30 ரன்களை சேகரித்தார். வழக்கம்போல் பார்வையாளர்களை நகம் கடிக்க வைத்துவிட்டனர் சி.எஸ்.கே வீரர்கள். ஆனாலும், இறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. கொல்கத்தாவுக்கு இது ஹாட்ரிக் தோல்வி. தற்போது சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.