16 ஆவது ஐபிஎல் சீசனின் 55 ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (10.05.2023) நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 167 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 25 ரன்களையும் ருதுராஜ் கெய்க்வாட் 24 ரன்களையும் எடுத்தனர். டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்களையும் அக்ஸர் 2 விக்கெட்களையும் குல்தீப், லலித் யாதவ், கலீல் அஹமத் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 168 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 140 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ரூசோ 35 ரன்களையும் மனிஷ் பாண்டே 27 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய சென்னை அணியில் பதிரனா 3 விக்கெட்களையும் தீபக் சாஹர் 2 விக்கெட்களையும் ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ருத்துராஜ் கெய்க்வாட் குறித்து பேசுகையில், "ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் ரன் எடுக்க ஆரம்பித்து விட்டால் எதிரணியினர் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும். அவர் சிரமமின்றி விளையாடி வருகிறார்.அவரிடம் கிரிக்கெட் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. அவர் தன்னை மைதானத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றியமைக்கத் தயாராக இருக்கிறார். அணிக்கு இது போன்ற வீரர்கள் கிடைப்பது அரிது. ஒவ்வொரு அணிக்கும் இவரை போன்ற வீரர்களே தேவையாக இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.