இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது. குறிப்பாக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்தது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், மீதமிருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
மேலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ்விற்கு பதிலாக குல்தீப் யாதவ்வை இறக்கியதும் விவாதத்திற்கு உள்ளானது. வேகப்பந்துக்கு ஏதுவான லார்ட்ஸ் பிட்சை இங்கிலாந்து வீரர்கள் சரியாக கணித்ததுபோல், இந்திய வீரர்கள் செய்யவில்லை. அதேபோல், இந்திய அணியின் பேட்ஸ்மென்கள் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், டி20 தொடரின்போது கைவிரல் காரணமாக நாடு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயம் குணமடைந்துள்ள நிலையில், அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அது நடக்காத சூழலில், இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கலாம். ஆனால், இந்திய அணியின் பேட்டிங் லைநப் எதிர்பார்த்த அளவுக்கு எதிரணியை சோதிக்காதபோது, இதுபோன்ற கூடுதல் பலங்கள் வெற்றிக்கு எடுத்துச் செல்லாது. குறைகளைக் கலைந்து மூன்றாவது அணியில் களமிறங்குவதாக கோலி சொன்னது நடக்கவேண்டும்.