2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் கடைசி பந்தில் சென்னை அணி 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்த போது விக்கெட் விழுந்தது. இதனையடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வென்று கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் பெங்களுருவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த சந்த் பாஷா (வயது 25) என்பவர் தனது வீட்டில் இருந்து ஆன்லைன் வழியே இந்த போட்டிக்கான சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றிய தகவல் மத்திய குற்ற பிரிவு சிறப்பு படையினருக்கு கிடைத்த நிலையில், அவர்கள் குறிப்பிட்ட அந்த நபர் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர்.
அவர்களை கண்டதும் சந்த் பாஷாவுடன் இருந்த சையது இலியாஸ் என்பவர் அங்கிருந்து தப்பியோடினார். ஆனால் பாஷாவை மத்திய குற்ற பிரிவு சிறப்பு படையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.70.33 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.