2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை வரும் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்க பிசிசிஐ திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா பரவல் அதிகரிப்பு அத்திட்டத்தில் சிக்கலை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஒருவேளை ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாவிட்டால் எங்கு நடத்துவது என்பது குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ அண்மையில் ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், மும்பை ஆகிய இடங்களில் ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு இறுதியில், மும்பையில் ஐபிஎல் தொடரை முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து, அங்கு நிலவும் கரோனா சூழ்நிலையை கவனத்தில் கொண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி பிசிசிஐ இறுதி முடிவெடுக்கவுள்ளது.
இந்தநிலையில் ஐபிஎல் தொடரை தென்னாப்பிரிக்காவில் நடத்துவது தொடர்பாக, அந்தநாட்டு கிரிக்கெட் வாரியதுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது, இந்திய கிரிக்கெட் வாரியம், அருகருகே இருக்கும் மைதானங்களில் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அணிகளுக்கு ஏற்படும் செலவை குறைக்க, விமான பயணங்களை தவிர்க்கும் பொருட்டு அருகருகே உள்ள மைதானங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாகவும், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியமும் ஜோகன்னஸ்பர்க் மற்றும் அதனை சுற்றி அருகருகே அமைந்துள்ள மைதாங்களில் போட்டியை நடத்தலாம் என கூறியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்த பேச்சுவார்த்தையின்போது, ஐக்கிய அரபு அமீரகத்தை விட தென்னாப்பிரிக்காவில் ஹோட்டல் வாடகையில் மலிவாக இருக்கும் என்பதை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சுட்டிக்காட்டியதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.