தோனிக்காக ஒரு ஃபேர்வெல் போட்டியை நடத்த விரும்புகிறோம் என பிசிசிஐ விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சில தினங்களுக்கு முன்னால் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனியின் இந்த திடீர் அறிவிப்பானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல நாடுகளைச் சேர்ந்த மூத்த வீரர்கள் பலர், தோனியின் இந்த முடிவு குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும் சிலர் அவருக்காக ஒரு ஃபேர்வெல் போட்டியை நடத்தி அதில் அவருக்கு முறைப்படி பிரியா விடை கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். தற்போது இந்த கோரிக்கையை பிசிசிஐ கவனத்தில் எடுத்துள்ளது.
இது குறித்து கூறிய பிசிசிஐயின் அதிகாரி ஒருவர், "தோனி இந்த நாட்டிற்காக பல சாதனைகளைச் செய்துள்ளார். அவரை முறைப்படி கவுரவிக்க வேண்டும். அதற்கு எல்லா வகையிலும் தோனி தகுதியானவர். தற்போது சர்வதேச போட்டிகள் எதுவும் இல்லை. அதனால் ஐபிஎல்லுக்கு பிறகுதான் அடுத்த கட்டம் குறித்து முடிவெடுக்க முடியும். இதுகுறித்து தோனியிடம் இன்னும் பேசவில்லை. ஐபிஎல் சமயத்தில் அவரது கருத்தை கேட்க இருக்கிறோம். அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவருக்காக ஒரு போட்டியை நடத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.