Skip to main content

மாயக்காரன் ஜடேஜா; இந்திய சுழலில் ஆஸி. ஆல் அவுட்

Published on 19/02/2023 | Edited on 19/02/2023

 

Aussie all out in Indian spin

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 

 

முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்தது. தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது. இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இந்நிலையில் டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியிலும் இந்திய அணிக்கு சுழல் கைகொடுக்க ஆஸ்திரேலியா தொடர்ந்து தடுமாறியது. முதல் இன்னிங்ஸில் அஸ்வின் மூன்று விக்கெட்களையும், ஜடேஜா மூன்று விக்கெட்களையும் ஷமி நான்கு விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியில் கவாஜா 81 ரன்களை எடுத்து அவுட்டாக ஹேண்ட்ஸ்கோப் 72 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

 

தொடர்ந்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 17 ரன்களில் முதலில் வெளியேற அடுத்தடுத்த விக்கெட்களை இந்திய அணி தொடர்ச்சியாக இழந்தது. விராட் கோலி மட்டும் நிதானமாக ஆடி 44 ரன்களில் ஆடிக்கொண்டு இருந்தபோது குஹன்மன் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். இறுதியில் அக்ஸர் படேல் மற்றும் அஸ்வின் ஜோடி கைகொடுக்க இந்திய அணி 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக அக்ஸர் படேல் 74 ரன்களையும் அஸ்வின் 37 ரன்களும் எடுத்திருந்தனர்.

 

தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய ஆஸ்திரேலியா தனது துவக்கத்தை சிறப்பாக அமைத்தது. லபுசானே 35 ரன்களையும் ட்ராவிஸ் ஹெட் 43 ரன்களையும் எடுத்தனர். பின் வந்த வீரர்கள் ஜடேஜாவின் சுழலில் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். ஆஸி.யின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜடேஜா 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்த, அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இறுதியில் ஆஸி. அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழக்க இந்திய அணிக்கு 115 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.