ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் கோலாகலமாகத் தொடங்கி உள்ளது.
சீனாவின் கஹாங்ஸூ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கி உள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் போட்டியைத் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் சீன பாரம்பரியப்படி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடக்க விழாவில் இடம்பெற்றுள்ளன. தொடக்க விழாவிற்கான அணி வகுப்பில் வீரர் வீராங்கனைகள் தங்கள் நாட்டின் தேசியக் கொடியை ஏந்தி மைதானத்தில் வலம் வருகின்றனர். அக்டோபர் 8 ஆம் தேதி வரை 16 நாட்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் சுமார் 12 ஆயிரம் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டி கடந்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டு தற்போது தாமதமாக நடைபெற்று வருகிறது. சீனாவில் 6 நகரங்களில் 61 பிரிவுகளில் நடைபெறும் நிலையில், 40 விளையாட்டுப் போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஆசிய விளையாட்டுப் போட்டி அதிகாரப்பூர்வமாக இன்று தொடங்கினாலும் சில விளையாட்டுப் போட்டிகள் கடந்த 19 ஆம் தேதியே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி சார்பில் 655 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.