Skip to main content

ஆசியக் கோப்பையில் இந்திய அணியின் பல சாதனைகள்... சில வேதனைகள்….

Published on 01/10/2018 | Edited on 01/10/2018

பல அற்புதங்கள் மற்றும் ஆச்சரியங்கள் கொண்ட இந்த வருட ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. 6 நாடுகள் கலந்து கொண்ட ஆசியக் கோப்பையில் இந்த வருடம் பரபரப்புக்கு பஞ்சமில்லை. பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் எளிதாக வென்றது இந்தியா. குட்டி ஹாங் ஹாங் அணியுடன் நடந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் இந்தியா சமன் மட்டுமே செய்தது. வங்கதேச அணியுடன் நடந்த இறுதி போட்டியில் போராடி வென்றது. பல சாதனைகளை இந்திய அணி படைத்திருந்தாலும், சில வேதனைகளையும் கடந்துதான் வெற்றி பெற்றது. ஒருபுறம் இந்திய அணிதான் இந்த ஆசியக் கோப்பை போட்டியின் சிறந்த அணி என்ற போதிலும், இன்னும் மேம்பட வேண்டிய இடங்கள் அதிகம் உள்ளது என்பதே உண்மை. 

 

as

 

 

உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கோலி இல்லாமல், இந்திய அணி வென்றது கண்டிப்பாக சாதனைத்தான். ரோஹித் ஷர்மா தலைமையில் களம்கண்ட இந்திய அணி பல்வேறு சாதனைகளைப் புரிந்தது. எம்.எஸ்.தோனி ஆசியக் கோப்பை போட்டியில் அதிக ஸ்டம்பிங் செய்து, சங்ககரா சாதனையை முறியடித்தூள்ளார் (எம்.எஸ்.தோனி (12), சங்ககரா (10)). ரோஹித் ஷர்மா, தான் கேப்டனாக இருந்த முதல் நான்கு தொடர்களிலும் வென்று ராகுல் டிராவிட் சாதனையை சமன் செய்தூள்ளார். எம்.எஸ்.தோனி இதுவரை சர்வதேச போட்டிகளில் 800 வீரர்களை தனது விக்கெட் கீப்பிங் மூலம் ஆட்டமிழக்க செய்து, மார்க் பௌசர் மற்றும் கில்கிரிஸ்ட் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் உள்ளார். தோனி 200–வது போட்டியில் கேப்டனாக, இந்த வருட ஆசியக் கோப்பையில் விளையாடியது அவரின் இரசிகர்களுக்கு சிறப்பானது.

 

as

 


ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வென்றதன்மூலம் சர்வதேசப் போட்டிகளில் 700-வது வெற்றியை பதிவு செய்து இந்திய அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்தியா அதிகபட்சமாக ஆசியக் கோப்பை ஒரு நாள் தொடரை 6 முறையும், டி 20 தொடரை ஒரு முறையும் வென்றுள்ளது. அடுத்த படியாக இலங்கை 5 முறை ஆசியக் கோப்பை ஒரு நாள் போட்டிகளில் வென்றுள்ளது. கடைசியாக, தான் கலந்து கொண்ட 11 ஆசியக் கோப்பை போட்டிகளில் ஒரு முறைகூட இந்திய அணி தோற்கவில்லை. இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 6 போட்டிகளில் 10 விக்கெட்கள் எடுத்து உள்ளார். வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை புவனேஸ்வர் குமார் 5 போட்டிகளில் 6 விக்கெட்களும், ஜாஸ்ப்ரிட் பும்ராஹ் 4 போட்டிகளில் 8 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளனர். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், ரவீந்தர ஜடேஜா மற்றும் சாஹல் ஆகியோர் இணைந்து 23 விக்கெட்கள் எடுத்துள்ளனர்.

 


இந்திய அணியின் தொடக்க இணையைப் பொறுத்தவரை சிறப்பாக அனைத்து ஆட்டங்களிலும் வெளிப்படுத்தி உள்ளனர். மிடில் ஆர்டர் பேட்டிங் பொறுத்தவரை சிறப்பாக இல்லாவிட்டாலும், ஓரளவு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் இந்திய அணிக்கு பெரிய ஏமாற்றமாக இருப்பது மிடில் ஆர்டர் பேட்டிங். பெரிய வேகப்பந்து வீச்சு இல்லாத அணிகளிடம் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்புவது பெரிய பலவீனமாக உள்ளது. மேலும் ஹர்டிக் பாண்டியா தவிர வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இல்லாதது கவனிக்கபட வேண்டிய ஒன்று. 

 

 

கேதர் ஜாதவ் 6-வது பௌலராக சிறப்பாக செயல்பட்டபோதிலும், 2019-ஆம் ஆண்டு உலக கோப்பை இங்கிலாந்தில் நடைபெறுவதால் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் அவசியமாக கருதப்படுகிறது. புவனேஷ், பும்ராஹ் தவிர வேகபந்து வீச்சில் வலுவான பந்து வீச்சாளர்கள் இல்லை. மேலும், நம்பர் 4 மற்றும் 6-வது இடங்களில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் யார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. 8 மாதங்கள் மட்டுமே உலக கோப்பை போட்டிக்கு உள்ளதால் இந்த பலவீனங்களை விரைவாக சரிசெய்ய வேண்டிய கட்டத்தில் உள்ளது இந்திய அணி.