16 ஆவது ஐபிஎல் சீசனின் 8 ஆவது லீக் போட்டி கவுஹாத்தியில் உள்ள பார்ஸ்பரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் ப்ரப்சிம்ரன் மற்றும் ஷிகர் தவான் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு 90 ரன்களை குவித்த இந்த ஜோடியில் ப்ரப்சிம்ரன் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வீரர்களில் ஜிதேஷ் சர்மா (27 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் பெரிதும் சோபிக்காத நிலையில் ஷிகர் தவான் மட்டும் நிலையாக நின்று ரன்களை சேர்த்தார்.
20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 197 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஷிகர் தவன் 86 ரன்களை குவித்தார். ராஜஸ்தான் அணியில் ஹோல்டர் 2 விக்கெட்களையும் அஷ்வின், சாஹல் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் அஷ்வின் தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனாலும் ராஜஸ்தான் அணிக்கு இந்த யுக்தி கைகூடவில்லை. தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 11 ரன்களிலும் அஷ்வின் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பட்லர் 19 ரன்களில் வெளியேற சஞ்சு சாம்சன் தனி ஆளாகப் போராடி அவரும் 42 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதி ஓவர்களில் ஹெட்மயர் மற்றும் ஜூரல் ஜோடி அதிரடியாக ஆடினாலும் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிறப்பாக பந்து வீசிய பஞ்சாப் அணியில் எல்லிஸ் 4 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.