சிக்ஸர் அடித்ததற்காக பென் ஸ்டோக்ஸ் கோபம் காட்டியது குறித்து இளம் பேட்ஸ்மென் அனுமா விஹாரி விளக்கமளித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடிக் கொண்டிருந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேற, அறிமுக வீரர் அனுமா விஹாரியுடன் இணைந்து கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்தப் போட்டியில் 124 பந்துகளைச் சந்தித்த அனுமா விஹாரி, 56 ரன்கள் எடுத்து முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்தார். விராட் கோலி வெளியேறிய பிறகு, ஜடேஜாவுடன் இணைந்து போதுமான ரன்களை சேர்த்தார். இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை எதிர்கொண்ட விஹாரி, சிக்ஸர் அடித்து வெளியனுப்பினார். இதனால், ஆத்திரமடைந்த ஸ்டோக்ஸ் விஹாரியை நோக்கி ஆக்ரோஷமாக கத்தினார். அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட ஸ்டோக்ஸ் முயன்றபோது, கேப்டன் விராட் கோலி குறுக்கிட்டு அதைத் தவிர்த்தார். மேலும், களத்தில் விஹாரிக்கு ஊக்கமளித்து வந்தார்.
தன்னை நோக்கி நேரடியாக அவர் எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை. சொல்லியிருந்தால் நானும் நேர்மறையாக எதிர்வினை ஆற்றியிருப்பேன். இதுபோன்ற விஷயங்களில் தலையிடுவதை விட எனது தேவையை களத்தில் பூர்த்தி செய்யவே முயற்சிக்கிறேன். அதனால், பென் ஸ்டோக்ஸ் செயலினை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என அனுமா விஹாரி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.