Skip to main content

புளிச்ச ஏப்பம் வராமல் இருக்க இந்த முறையில் தான் சாப்பிட வேண்டும்

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

You should eat in this way to avoid Acid reflux issue 


நக்கீரன் நலம் யூடியூப் சேனலுக்காக இரைப்பை மற்றும் குடல் நோய் சிறப்பு மருத்துவர் கண்ணன் அவர்களை சந்தித்தோம். ஏற்கனவே அவர் வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல் குறித்து சொன்ன டிப்ஸ் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தொடர்ந்து அவரிடம் புளித்த ஏப்பம் வருவது குறித்த பிரச்சனையை சரி செய்து கொள்ளும் முறைக்கு டிப்ஸ் கேட்டிருந்தோம். அது பற்றிய அவரது விளக்கத்தினை பின்வருமாறு காண்போம்...

 

நல்ல உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது மிகவும் முக்கியம். காலை எழுந்ததும் வெந்நீர் இரண்டு டம்ளர் குடிக்க வேண்டும். அதுவும் மிகவும் சூடாக இருக்கக் கூடாது. இளஞ்சூடாக இருக்க வேண்டும். வாய்ப்பிருந்தால் தேன் கலந்த சுடுதண்ணீரைக் குடிக்கவும். கிரீன் டீ குடிக்கவும். கிரீன் டீ ஒரு நாளைக்கு ஐந்து கப் வரை எடுத்துக் கொள்ளலாம். கிரீன் டீ குடிப்பதால் புத்துணர்ச்சி ஏற்படும். அது நோய் எதிர்ப்பு சக்தியை உண்டுபண்ணக் கூடியதாகும்.

 

அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்யவும். மற்றொரு அரை மணிநேரம் யோகா, தியானம் போன்று மனதை மகிழ்விக்கக் கூடிய பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். மனவழுத்தத்தைக் குறையுங்கள். தேவையில்லாத டென்சனை குறையுங்கள். இதைத் தினமும் தொடர்ந்து செய்துவந்தால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

 

மூன்று வேளையுமே வயிறு முட்ட முட்ட சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். அதை ஆறு வேளையாகப் பிரித்துக்கொள்ளவும். 3 வேளை எப்போதும் எடுத்துக்கொள்கிற உணவின் அளவில் கம்மியாகவும், மீதம் 3 வேளை ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்ளவும். காலையில் மன்னரைப் போல சாப்பிட வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு அவித்த முட்டையும், புரதச்சத்து நிறைந்த சட்னியும் காலை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

 

மதியம் கீரைக் கூட்டும் காய்கறி பொரியலும் இணைந்து ரசமும் தயிரும் சேர்ந்த சாதம் எடுத்துக்கொள்ளலாம். நன்றாக மென்று விழுங்க வேண்டும். 2 மணிக்குள் மதிய உணவை முடித்துவிட வேண்டும். மதிய உணவு முடிந்ததும் கொஞ்சம் லேசான நடை நடக்க வேண்டும். அப்போது தான் வயிறு உப்பசமாக இருக்காது. மாலை பிளாக் காபி எடுத்துக்கொள்ளலாம்.

 

இரவு எட்டு மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவை எடுத்துக்கொள்ளவும். பொறித்த உணவு எடுத்துக்கொள்ள வேண்டாம். காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்கள், கீரைகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் ஜீரணத்தன்மை அதிகரிக்கும். ஆறு மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் வேண்டும். இதனால் புளித்த ஏப்பமற்ற வாழ்க்கை முறை நமக்கு வாய்க்கும்.