வீகன் டயட் என்பது இந்திய அளவில் பலர் தற்போது பின்பற்றி வரும் ஒரு உணவுமுறை. அதன் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா விரிவாக விளக்குகிறார்.
வீகன் முறையால் ஊட்டச்சத்து ரீதியில் எந்த நன்மையும் கிடையாது என்பதை ஆணித்தரமாக என்னால் சொல்ல முடியும். அது ஒரு நம்பிக்கை சார்ந்தது தான். பச்சைக் காய்கறிகளை அதிகமாக உட்கொண்டு, அதன் மூலம் ஹார்மோனில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து சிறப்பான முறையில் வாழும் ஒரு ராவான டயட் பற்றி நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அதுபோலவே உடல் இளைப்பதற்காக டயட் முறையும் இருக்கிறது.
வீகன் என்பது சைவ முறை போல நம்பிக்கை சார்ந்த ஒன்று. ஆனால் சைவத்தில் வைட்டமின் பி12 கிடைக்கும், வீகனில் அது கிடைக்காது. சமீபத்தில் நான் அமெரிக்கா சென்ற போது அங்கு ஒரு 14 வயது பையன் தான் ஒரு வீகன் என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டான். அதனால் அவன் பால் பொருட்களை எடுத்துக் கொள்ளவில்லை. அந்தப் பையன் பின்பற்றும் முறை சரியா, தவறா, அவனுக்கு என்ன தேவை என்பது குறித்தெல்லாம் அவனுடைய பெற்றோர் கவலை கொள்ளவில்லை.
வீகன் என்பது தற்போது ஒரு ஃபேஷனாக உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் என்பது அதீதமான கற்பனை. ஆனால், இது உடலுக்கு நல்லதல்ல என்பது என்னுடைய கருத்து. வீகன் முறையால் வைட்டமின் பி12 கிடைப்பதில்லை என்பது பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. உயிர்களைக் கொல்லாமல் ஒருவர் உணவு உண்ணவே முடியாது. விவசாயத்திலேயே நாம் பல உயிரிகளைக் கொல்கிறோம். எந்த நம்பிக்கையில் வீகன் முறைக்கு இவர்கள் செல்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது உடலுக்கு ஒவ்வாத உணவு முறை.