சிறுநீர் கசிவு; சிறுநீர் அடங்காமை சிக்கல்கள் ஏற்படுகிற பெண்களுக்கு, அதை குணப்படுத்த அறுவை சிகிச்சை மூலம் தான் முடியும் என்கிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத். அவர் அளிக்கும் விளக்கத்தினை பின் வருமாறு காணலாம்.
அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும் என்று உடனே சொன்னால் பயப்படுவார்கள். அதனால் அவர்களுடைய பிரச்சனையின் தீவிரத்தன்மையை அவர்களுக்கு உணர்த்தி அதிகபட்சமாக அறுவை சிகிச்சைக்கு போகாமல் குணப்படுத்த முயற்சிகள் முதலில் செய்யப்படும்.
அதில் முதலாவதாக அதிக உடல் எடை உள்ள பெண்களுக்கு உடல் பருமனை குறைப்பதற்கான அறிவுரைகள் வழங்கப்படும். அதை முறையாகப் பின்பற்றி உடல் பருமனை குறைப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாது. இரண்டாவதாக சுகப்பிரசவத்தின் போது குழந்தைகள் பிறப்புறுப்பு வழியாக வருவதால் அந்த தசைகள் சேதமடைந்திருக்கும்; இறுகும் தன்மை குறைந்திருக்கும். அதற்கு பயிற்சி கொடுத்து சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த தசை இறுக்கப் பயிற்சியானது குழந்தை பிறந்த பிறகு கர்ப்பமாக இருந்த பெண்கள் மேற்கொள்ளலாம். பிறப்புறுப்பையும், கழிவு வெளியேறுகிற இடத்தையும் உட்புறமாக உள்ளிழுத்து ஒன்றிலிருந்து ஐந்து வரை மெதுவாக எண்ணும் அளவிற்கு பயிற்சி செய்ய வேண்டும். மூச்சை இழுத்துப் பிடிக்க அவசியமில்லை. சிகிச்சைக்கு வருகிற பெண்களுக்கு சொல்லி அனுப்பினாலும் செய்ய மறந்து விடுகிறார்கள். ஆனால், இந்த பயிற்சியை செய்யும் பட்சத்தில் படிப்படியாக சிறுநீர் கசிவு குறையும்.
இருமல் வரப்போகிறது; தும்மல் வரப்போகிறது என்று தெரிந்த உடனேயே இந்த பயிற்சியை செய்துவிட வேண்டும். அப்போது கசிவை நிறுத்தி விடலாம். பிரச்சனையின் தீவிரத்தன்மையை பொறுத்து அறுவை சிகிச்சை தான் செய்து குணப்படுத்த முடியும்.