பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவர் நித்யா தீர்வு சொல்கிறார்.
இன்றைய கால பெண்களுக்கு குழந்தைப்பருவத்திலிருந்து வயதான காலம் வரை பல்வேறு வகையான நோய்களுக்கு ஆட்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் நமது தாத்தா, பாட்டி காலங்களில் சாப்பிட்ட உணவு பழக்க வழக்க முறைகள் இப்போது இல்லை. முற்றிலுமாக மாறி விட்டது. நாம் மறந்த பல சத்தான உணவு முறைகளால் இன்றைய கால பெண்கள் பல நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
குறிப்பாக இன்றைய காலத்தில் பெண்கள் 10 வயதிலிருந்து 12 வயதிற்குள் பருவமடைந்து விடுகிறார்கள். உணவு மாற்றங்களினால் இதில் சற்று முன்னே, பின்னே மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறு வயது பெண்களுக்கு முன்னெல்லாம் பருவமடைவதற்கு முன்னரே கொடுக்கும் உணவு வகைகளில் மிகவும் கவனம் செலுத்துவார்கள். அந்த உணவுகள் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மேன் அளவினை சரிவிகிதத்தில் வைத்திருக்க உதவியிருக்கிறது.
இடுப்பு எலும்புகள் வலிமையானதாக இருக்க வேண்டும். கருப்பை உயிரைத் தாங்கும் அளவிற்கு வலிமை பெற வேண்டும் என்று அதற்கு ஏற்றார் போல் உணவுகள் தந்திருக்கிறார்கள். அந்த மாதிரியான உணவுகள் கருப்பு எள், நல்லெண்ணைய், கருப்பு உளுந்து, நாட்டுக்கோழி முட்டை ஆகியவற்றை உணவில் சேர்த்தார்கள்.இன்றைய கால குழந்தைகள் பருவமடைந்த போது என்ன மாதிரியான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையே தெரியாமல் இருக்கிறார்கள். அதனால் தான் பிசிஓடி சிக்கல் வருகிறது. குழந்தையின்மை அதிகரிக்கிறது.
சித்த மருத்துவ முறையில் பிசிஓடி, குழந்தையின்மை போன்றவற்றிற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது வெறும் மருந்து மட்டும் கொடுக்க மாட்டோம். உணவு முறையிலும் மாற்றங்கள் கொண்டு வர சில உணவுகளை பரிந்துரைப்போம். அவற்றை பின்பற்றும் போது மாதவிடாய் சிக்கல், தைராய்டு, உடல்பருமன் ஆகிய சரியாகும்.