உணவே மருந்து; மருந்தே உணவு என்பது நாம் பலமுறை கேள்விப்பட்ட சொல்லாடல். நம்முடைய பாரம்பரிய உணவு முறைகளில் குவிந்திருக்கும் மருத்துவ நலன்கள் என்னென்ன? நம்முடைய முன்னோர்கள் எவ்வாறு உணவையே மருந்தாகப் பயன்படுத்தினார்கள்? என்பது குறித்து சித்த மருத்துவர் டாக்டர். அருண் விளக்குகிறார்.
மருந்தே உணவு என்றால் என்ன? அதன் அர்த்தம் தான் என்ன என்ற கேள்வி பலருக்கு வரும். உணவுப் பொருட்கள் மருந்தாகப் பயன்படக்கூடியவை. வீட்டில் இருக்கும் அஞ்சறைப் பெட்டியில் மஞ்சள், மிளகு, வெந்தயம், சீரகம், பூண்டு, பெருங்காயம், சுக்கு, ஏலக்காய் ஆகியவை இருக்கும். இவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட முறையில் மருந்தாகவும் பயன்படும்; உணவாகவும் பயன்படும். இதனால் தான் உணவே மருந்து, மருந்தே உணவு என்கிறோம். தினமும் நாம் பயன்படுத்தும்போது உணவாகவும், நோய்க்காகப் பயன்படுத்தும்போது மருந்தாகவும் பயன்படுகிறது.
மஞ்சள் ஒரு மகத்தான மருந்து. சிறிய நோய்களிலிருந்து பெரிய நோய்கள் வரை குணப்படுத்தக்கூடியது. மிளகு, நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கக்கூடியது. கிருமிகளுக்கு எதிராகப் போராடக் கூடியது. எந்த மருந்தாக இருந்தாலும் அதனோடு மிளகு சேர்த்துக் கொடுத்தால் மருந்தின் வீரியம் அதிகரிக்கும். வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிட்டால் குளிர்ச்சி தரும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தம். பூண்டு கொழுப்பைத் தடுக்கும். சீரகம் செரிமானத்திற்கு உதவுகிறது; பித்தத்தைத் தணிக்கக் கூடியது.
பொதுவாக சித்த மருத்துவத்தில் நாடி பிடித்துப் பார்க்கும் வழக்கம் உண்டு. அதன் மூலம் நோயை அவர்களால் கண்டறிய முடியும். வாதம், பித்தம், கபம் ஆகியவை இயல்பு நிலையில் இருக்கும்போது நோய்கள் அண்டாது. அன்றாடம் ரசம் வைத்து சாப்பிட்டாலே அவை இயல்பு நிலையில் இருக்கும். மிளகு கசாயம், அருகம்புல் சாறு, இனிப்பில் ஏலக்காய், குழம்புகளில் மஞ்சள், சர்க்கரை நோய் தீர தண்ணீரில் வெந்தயம், தொண்டையில் உள்ள டான்சில் பிரச்சனை தீர தேனுடன் பூண்டு ஆகியவை உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் பெரும்பங்காற்றுகிறது. மேற்சொன்ன ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் மிகப்பெரிய மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. பவுடர்களாக இருந்தாலும் அவற்றை வீட்டிலேயே தயாரிப்பது சிறந்தது. இவை அனைத்தையும் தினசரி உணவாகவே நாம் எடுத்துக்கொண்டால் ஆரோக்கியம் உறுதி.