Skip to main content

குழந்தைகள் மன அழுத்தமாக இருக்க யார் காரணம்? - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 30/07/2024 | Edited on 30/07/2024
Psychiatrist Radhika murugesan explained about stress pressure

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் படிப்பிற்காக கொடுக்கும் அளவுக்கு மீறின ப்ரெஷரினால் ஏற்படும் பாதிப்பை பற்றி பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். 

என்னிடம் கவுன்சிலிங் வந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எவ்வளவு சொன்னாலும் படிப்பதில்லை என்று கவலை படுவார்கள். ஆனால் குழந்தைகளை சந்திக்கும் போது அவர்களுக்கு வேறொரு திறமை இருப்பதை பார்க்க முடியும். பெற்றோருக்கும் மதிப்பெண் மட்டுமே வெற்றியை தேடி தரும் என்ற மனப்பக்குவம் தவறு தான் என்று தெரிவதில்லை. எனக்கு தெரிந்த ஒரு நண்பர் அக்கவுண்டண்டாக இருந்தார். ஆனால் தற்போது வேலையை விட்டு விட்டு ஹேர் ட்ரெஸ்ஸராக இருக்கிறார். அவரிடம் காரணம் கேட்டபோது கணினி முன்பு வெறும் எண்களை தட்டி கொண்டிருப்பதை விட இப்போது என்னிடம் வரும் வாடிக்கையாளரிடம் நிறைய விஷயங்கள் பரிமாறி கொள்ள முடிகிறது. தனக்கு இது ஸ்ட்ரெஸ் பிரீயாக இருப்பதாக சொன்னார். படிப்பு என்பது வேறு, குழந்தைகளின் ஆசை கனவு வேறு என்று பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தனக்கு பிடித்த துறையிலே தான் தொடர்ந்து இறுதி வரை நிலைத்திருக்க முடியும்.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறார்கள். அவர்களை விட பிள்ளைகள் சிறந்த வாழ்க்கையைப் பெற விரும்பியும், அவர்களின் எதிர்காலம் மற்றும் நல்வாழ்வுக்கு படிப்பின் மூலமாகவே வெற்றி கிடைக்கும் என்றே நினைக்கிறார்கள். சமூகமாற்றமும் இது போன்று பெற்றோர்கள் பிள்ளைகள் படிப்பில் செல்வாக்கு செலுத்துவதில் பங்கு வகிக்கிறது. இதனால் தான் இன்றைய குழந்தைகள் கல்வியில் ஒரு தோல்வி என்று வரும் போது அது ஒரு பகுதி என்று பார்க்காமல் மொத்த வாழ்க்கையும் தோற்றுவிட்டதாக எண்ணி தற்கொலை வரை செல்கிறார்கள். இன்றும் நீட்  தேர்வு தோல்வியில்   நடக்கும் தற்கொலைகளை பார்க்கிறோம். படிப்பில் சிறந்து விளங்காவிட்டாலும் பல்வேறு படைப்பு துறைகளில் அவர்களால் தங்கள் திறமைகளை காட்டி அதன் மூலம் வெற்றி காண முடியும். ஆனால் நம் சமூகம், படித்து கண்டிப்பாக ஒரு மருத்துவாராகவோ, என்ஜினீயராகவோ தான் ஆக வேண்டும் என்று எழுதா சட்டமாக வைத்திருக்கிறது. 

யாருடைய ஐ.கியூ லெவலையும் செயற்கையாக மாற்ற முடியாது. இதை புரிந்து கொள்ளாமல் பெற்றோர் குழந்தைகளை வற்புறுத்தி அத்தனை வகுப்புகள் போகவைத்து மூச்சு விட நேரம் கொடுக்காமல் நெருக்குகிறார்கள். மேலும் தாங்கள் பிள்ளைகளுக்கென்று செய்யும் படிப்பு செலவுகளை சொல்லி காட்டி அவர்கள் மீது அவர்களுக்கே குற்ற உணர்வு வரும்படி திணிக்கிறார்கள். வெற்றி என்பது சேருமிடம் இல்லை. அது ஒரு பயணமாக தான் இருக்கும் என்று பெற்றோர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் வைக்கும் எதிர்பார்ப்பை விட தன்னால் எவ்வளவு முடியும் என்று சுய அளவை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப  பெர்பார்ம் செய்வதில் பிள்ளைகள் கவனம் கொள்ள வேண்டும். மதிப்பெண்ணுக்கு கொடுக்கும் பயிற்சியை விட வாழ்வியல், உறவுகள், மக்கள் தொடர்பு என அவர்களின் எதிர்காலத்திற்கு தேவையானவற்றை பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லி கொடுக்க வேண்டும்.