உடனடியாக உடல் எடையைக் குறைக்க உதவும் ஸ்நேக் டயட் முறையில் உள்ள பின் விளைவுகள் குறித்து விளக்கம் அளிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா.
ஸ்நேக் டயட் முறையைப் பின்பற்றுவதால் உடலின் எடை குறையும். ஆனால் அதனால் எதிர்மறையான பின்விளைவுகள் ஏற்படாது. இந்த முறையைப் பின்பற்றிய பிறகு உடல் இன்னும் பளிச்சென்று, இளமையாக ஆனது தான் என்னுடைய தனிப்பட்ட அனுபவம். சாப்பிடாமல் இருக்கும்போது உடல் கொஞ்சம் வலுவிழந்து போயிருக்கும். ஆனால் இந்த டயட் முறையைப் பின்பற்றி முடிக்கும்போது உங்களுக்கு நேர்மறையான விளைவுகள் தான் ஏற்படும்.
எந்த உடல் எடை குறைப்பு டயட்டாக இருந்தாலும் அவற்றுள் பிரச்சனைகள் இருக்கின்றன. ஸ்நேக் டயட் முறையைப் பொறுத்தவரை முழுமையான மருத்துவ ஆலோசனையோடு தான் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுவிடும். ஆரோக்கியமாக இருப்பவர்கள் இந்த டயட் முறையைப் பின்பற்றுவதால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் சரியான மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளாமல், ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த டயட்டை எடுத்துக்கொள்ளும்போது பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
பல்வேறு விதமான டயட்டுகள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு வந்தவை தான். இவை குறித்த முழுமையான புரிதல் நம் நாட்டில் இல்லை. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு குறிப்பிட்ட டயட் முறையைப் பின்பற்றுவது நல்லது. ஸ்நேக் டயட் முறையில் முதல் மூன்று நாட்கள் சில பின்விளைவுகள் ஏற்படலாம். ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மருத்துவத் துறையில் இருப்பதால் என் உடல்நிலை பற்றி எனக்கு நன்கு தெரியும். மற்றவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
இந்த முறையில், சாப்பிடுவதை நிறுத்தும்போது கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்த வேண்டும். அதன் பிறகு உங்களுக்குள் ஒரு நம்பிக்கை உருவாகும். உடல் எடையைக் குறைப்பதற்கு மட்டும்தான் இந்த ஸ்நேக் டயட் முறை பயன்படும். எடை குறைந்த பிறகு அதைத் தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கான டயட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கவனமாகச் செய்யும்போது இதுவும் ஒரு பாதுகாப்பான நடைமுறைதான்.