இன்றைய நவீன காலத்து தாத்தா, பாட்டிகளில் பெரும்பாலானவர்கள் படித்தவர்கள், வேலையில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் மற்றும் பேரக்குழந்தைகளுக்குக் கண்டிப்புடன் கல்வியை கற்றுக் கொடுப்பதில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள்.
இதுதவிரவும் இன்றைய தாத்தா பாட்டிகளைச் சுற்றி பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பெரும்பாலும் புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் பிற ஊடகங்கள் வாயிலாக தாத்தா, பாட்டிகள் மிகவும் வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் கண்டிப்பானவர்களாக உருவகப்படுத்தப்படுகின்றனர். அவர்கள், வெள்ளை முடியுடன், எப்போதும் 'வாக்கிங் ஸ்டிக்ஸ்' (walking sticks) உதவியுடன் மட்டுமே நடக்க முடியும் என்பது போன்றும் சித்தரிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு நற்பண்புகள் மற்றும் கல்வி கற்றுக்கொடுப்பது, நீதி நெறிகளைப் புகட்டுவது, இரக்கம், அன்பு, நம்பிக்கை ஆகியவற்றைக் கற்றுக் கொடுப்பதில் இன்றைய நவீன காலத்து தாத்தா, பாட்டிகள் பெற்றோர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.
மற்ற குழந்தைகளை விட தாத்தா, பாட்டிகளோடு வளரும் குழந்தைகளின் நடத்தைகளும், செயல்பாடுகளும் மேம்பட்டதாக இருக்கும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபணமாகியுள்ளது.
அவர்கள் கூறும் கதைகள் மற்றும் அவற்றில் உள்ள நீதி போன்றவை பிள்ளைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தாத்தா, பாட்டியிடம் நீதி நெறிமுறைகளைப் பிள்ளைகள் கற்றுக்கொள்வதால் சமுதாயத்தில் மரியாதை மிக்க, புரிதல் உள்ள அழகான பிள்ளைகளாக அவர்கள் வளர முடிகிறது.
குழந்தை வளர்த்தலில் தாத்தா, பாட்டிகளின் அதிக ஈடுபாடானது, அக்குழந்தைகளின் நற்பண்புகளை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சி ஒன்று சுட்டிக் காட்டுகிறது. 1,500க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், தாத்தா, பாட்டியுடன் வளரும் குழந்தைகள் தனியாக வளரும் குழந்தைகளில் இருந்து வேறுபடுகிறார்கள்.
தாத்தா, பாட்டிகளுடன் வளரும் குழந்தைகள் சில சிக்கலான சூழ்நிலையை எளிதில் கையாளும் திறமை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள், உறவுகளின் உன்னதத்தையும் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பவர்களாக இருக்கின்றனர்.
குழந்தைப் பருவத்தைச் சுவாரசியமாக்குவதில் தாத்தா, பாட்டிகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அவர்களுடன் நேரத்தைச் செலவிடும் குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று அறிவியல் மூலம் தெரியவந்துள்ளது.
மற்றுமொரு சமீபத்திய ஆய்வில், தாத்தா, பாட்டிகளுடன் வளரும் குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விடத் தனிமை, பதற்றம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, அறிவு மற்றும் ஆற்றலில் சிறந்த தாத்தா, பாட்டிகளுடன் குழந்தைகள் வளரும் போது குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாவது மட்டுமின்றி குழந்தைகள் ஆரோக்கியமாகவும், அறிவுடனும் வளர வழிவகை செய்யும்.