இந்த 2021 ஆம் வருடம் தொடக்கத்தில் உலகளாவிய நிகழ்வுகளைப் பார்க்கும்போது, அவற்றின் கணிப்பு மிகவும் அசாதாரணமான சூழ்நிலையில் இருப்பதை நாம் காண முடிகிறது. அவை, இந்த ஆண்டில் நம் அனைவருக்கும் தனிமை, சோகம், வேலையிழப்பு, மனச்சோர்வு, மற்றும் உளவியல் பிரச்சனைகளை வழங்கும் அபாயம் இருக்கிறது.
‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையானது சமீபத்தில், கடந்த ஆண்டின் கரோனா உள்ளிட்ட தவிர்க்க முடியாத சில நிகழ்வுகள், இந்த 2021இல் நம் அனைவருக்கும் மிகவும் ஆபத்தான கோபம், பயம், பதட்டம், விரக்தி, பீதி, போன்ற மனநலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளது. இவை தவிர, வரவிருக்கும் அரசியல் மாற்றங்கள், சுற்றுப்புற மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறு முரண்பாடுகளையும் எதிர்கொள்ள இந்த வருடத்தில் நாம் தயாராக வேண்டும் என்கிறது.
பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த வருடம், சமூகம் சார்ந்த சில பிரச்சனைகள் மற்றும் பொருளாதார பின்னடைவு போன்றவற்றிலிருந்து மீண்டுவரும் முயற்சியில் நாம் 'கத்தியின் விளிம்பில்' இருக்கிறோம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
இந்த தொடர்ச்சியான மன அழுத்தமானது, நமது மூளையில் பெரிய மாறுதல்களை உண்டாக்குகின்றன. அதனால் நாம் பல சுவாரஸ்யமான தகவல்களைக் கூட எந்த உணர்வுமின்றி அணுகுவது இயல்பாகி வருகிறது. எனவே, நாம் இந்த 2021 ஆம் ஆண்டினை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, தேவையற்ற எண்ணங்களைக் கைவிடுவது அவசியமாகிறது. எதிர்வரும் சவால்களை தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் கையாள கற்றுக்கொள்ளுங்கள்.
அதற்காக நாம் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே, நம்மை நாமே மகிழ்ச்சியூட்டும் செயல்களில் கட்டாயம் ஈடுபட வேண்டும். இருப்பினும், நாம் சில சமயங்களில் அதிகப்படியான மன உளைச்சலை உணரும்பட்சத்தில், அதற்கான மருத்துவ ஆலோசனைகளை நாடுவது அவசியமாகும்.
உடற்பயிற்சி செய்வது நமது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இது இருதய நோய்களைக் குறைத்து, இருதயத்தின் ஆயுளை அதிகரித்து, மன அழுத்தத்தினைக் குறைக்க உதவும். உடற்பயிற்சி அதிகமாக மேற்கொள்பவர்கள் அதிக நாட்கள் வாழ்வதாகவும் ஆராய்ச்சிகளும் கூறுகின்றன.
சமூக விஷயங்களுக்குக்காக உதவுவது மற்றும் சமூகம் சார்ந்த பணிகளை மேற்கொள்வது, மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமின்றி, வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியத்தைக் கூட்டுவதுடன் வாழ்நாளையும் அதிகரிக்கிறது.
நாம் நமது வாழ்க்கையில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம், மூளையின் செயல்திறன் அதிகரிப்பதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது மூளையைப் புத்துணர்ச்சி அடையச் செய்து நமது உடல்நலனைப் பாதுகாக்கிறது.
அதுமட்டுமின்றி, நல்ல தூக்கத்தின் மூலம் நமது உடல் சோர்வு, மனச் சோர்வு அனைத்தும் களையப்படுகின்றன. பொதுவாக தூக்கக் குறைபாடு, மனிதரின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருமளவு பாதிக்கிறது. எனவே, ஒவ்வொருவருக்கும் தினமும் 6 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியமாகிறது.
கடந்த ஆண்டின் நிகழ்வுகள் நம் அனைவருக்கும் மன உளைச்சல், பாதிப்பு மற்றும் ஏமாற்றத்தையும் அதிக அளவில் ஏற்படுத்தியிருந்தாலும், இந்த ஆண்டினை நாம் அனைவரும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை கொண்டு 'பாசிட்டிவ்' நோக்கத்துடன் எதிர்கொள்ளத் தயாராகிக் கொள்வோம்.