Skip to main content

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்கான ஆயுர்வேத மருத்துவக் கோட்பாடுகள்!

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

healthy habits to improve menstrual circle

 

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் ஆரோக்கியத்திற்கும், மனமகிழ்ச்சிக்கும் ஒரு முக்கியக் காரணமாகும்.

 

ஒரு பொதுவான மாதவிடாய் சுழற்சிகாலம் என்பது 21 முதல் 35 நாட்கள் வரை என கருதப்படுகிறது. அப்படியான, வழக்கமான மாதவிடாயின் சுழற்சியின்போது, ஒரு பெண்ணின் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் சுத்தம் செய்யப்படுவதால் உடல் ஆரோக்கியமாகி புத்துயிர் பெறுகிறது. எனவே, ஒவ்வொரு பெண்ணும் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு முறையான மாதவிடாய் சுழற்சியைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம்.

 

இருப்பினும், இன்றைய பெரும்பாலான இளைய தலைமுறையிடம், ஒழுங்கற்ற மாதவிடாய், வயிற்று வலி, மனநிலை மாற்றங்கள், கருவுறாமை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்றவை இயல்பாகி உள்ளது.

 

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை சமாளிக்க மிகவும் பயனுள்ள வழி என்னவென்றால், உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துதல், உடல் எடை குறைத்தல், ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது ஆகியவைதான்.

 

அந்த வகையில், மாதவிடாய் அல்லது அதன் சுழற்சி காலங்களை சரியான முறையில் தூண்டும் சில ஆயுர்வேதக் கொள்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெண்ணும் நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக, இதனை நிச்சயம் பின்பற்ற வேண்டும்.  

 

மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய ஆயுர்வேத வழிகாட்டுதல்கள் 'ராஜஸ்வால பரிச்சார்யா' என்று அழைக்கப்படுகின்றன. இந்த வழிகாட்டுதல்கள் அனைத்தும் விரிவாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

 

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்கான ஆயுர்வேத கோட்பாடுகள்:

தேநீர் குடிக்கவும்:


வெந்தய விதை, இஞ்சி தேநீர், கெமோமில் தேநீர், மற்றும் பெருஞ்சீரக விதை தேநீர் ஆகியவை உடலின் ஆரோக்கியத்தில் புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். அவை உங்கள் அன்றாட நாட்களை வழக்கமாக்குவது மட்டுமல்லாமல், பி.எம்.எஸ், வயிற்று வலி, முறையற்ற உணவு மற்றும் மனநிலை பிரச்சனை போன்ற சிக்கல்களையும் தவிர்க்கும். எனவே, இந்தப் பானத்தை ஒரு நாளில் ஒரு தடவையாவது அருந்துவது நல்லது.



ஒரு நிலையான வழக்கத்தை பின்பற்றுங்கள்:

ஆயுர்வேத கோட்பாடு, நிலையான வழக்கத்தில் கவனம் செலுத்துகிறது. உங்கள் உடல் கடிகாரம் போல ஓடக் கூடியது. இவற்றில், நீங்கள் சீக்கிரம் எழுந்திருப்பது, சரியான வேலை நேரத்தைப் பராமரிப்பது மற்றும் சரியான நேரத்தில் உணவை உட்கொள்வது ஆகியவை அடங்கும். அதிகப்படியான செயல்பாடு மற்றும் அதிகப்படியான வேலை உங்கள் மாதவிடாய் சுழற்சியைத் தடுக்கும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

 

ஹைட்ரேட்:

உடலை ஹைட்ரேட் (அதிக அளவு தண்ணீர் குடிப்பது) செய்வது ஆரோக்கியத்திற்கும், முறையான மாதவிடாய் சுழற்சிக்கும் மிகவும் முக்கியமானது. எனவே, உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.

 

உங்கள் உடலுக்கு ஓய்வு கொடுப்பது முக்கியம்:

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்குப் போதுமான அளவு ஓய்வு எடுப்பதும் முக்கியம். குறிப்பாக, மாதவிடாய் நாட்களில் நீங்கள் அதிகப்படியான ஓய்வில் இருக்க வேண்டும்.

 

உங்கள் மாதவிடாய் சுழற்சியின்போது, உடல் கழிவுகளின் இயக்கம் கீழ்நோக்கிய திசையில் இருப்பதால், அதிகப்படியான வேலை, பேசுவது, சிந்தனை, செக்ஸ் அல்லது எந்தவொரு உடல் செயல்பாடுகளும் மாதவிடாய் சுழற்சியின் இயற்கையான ஓட்டத்தைத் தடுக்கலாம்.

 

இதுபோன்ற செயல்களுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதாலும், மாதவிடாய் நாட்களில் உங்கள் உடலுக்கு அதிக ஓய்வு தேவை என்பதாலும், இவற்றை தவிர்ப்பது நல்லது.

 

மன அழுத்தமில்லாமல் இருங்கள்:

மன அழுத்தம், பதற்றம் போன்றவை உங்கள் ஹார்மோன் அளவை பாதிக்கிறது. இதனால் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு ஏற்படும்.

 

ஹார்மோன் சமநிலையில்லாமல் இருக்கும்போது, பி.சி.ஓ.எஸ் ஏற்படும். இது கருமுட்டைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதைக் கவனிக்காவிட்டால், பெண்களுக்குக் கருத்தரிப்பதில் கூட பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய்ச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுத்துவது, இதன் மிக முக்கியமான அறிகுறி. எனவே, இந்த நேரத்தில் உங்கள் மனதை அமைதியாக வைத்திருங்கள்.

 

நடைபயிற்சி செய்வது, சத்தான உணவுகளை சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது போன்ற வாழ்வியல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் இதை சரிசெய்யலாம்.

 

நீங்கள் இயற்கையின் நிகழ்வினை தடுக்க கூடாது:

உங்கள் மாதவிடாய் சுழற்சியின்போது, சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் மற்றும் தும்முவது போன்றவற்றை ஒருபோதும் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டாம். ஏனென்றால், கீழே செல்லும் உடல் ஆற்றலை நீங்கள் நிறுத்தினால், அது மாதவிடாய் சுழற்சியை எதிர்மறையாக பாதிக்கிறது.

 

உணவில் மாற்றம்:

அதிகமாக ஜங்க் ஃபுட் சாப்பிடுவது உடல் கோளாறுகளை ஏற்படுத்தி உடல்பருமனுக்குக் காரணமாகும். இது, மாதவிடாயில் பிரச்சனையை ஏற்படுத்தும்.  

 

எனவே, மாதவிடாய் சுழற்சியின்போது, கிச்சாரி, சூடான புதிதாக சமைத்த உணவு, பழங்கள் போன்ற சத்தான உணவுகளைக் குறைந்த அளவு உட்கொள்வது நல்லது. உங்கள் உணவில் இஞ்சி, கிராம்பு, குங்குமப்பூ, பெருஞ்சீரகம், சீரகம், இலவங்கப்பட்டை, கொத்தமல்லி, பூண்டு ஆகியவற்றைக் சேர்த்துக்கொள்ளலாம்.

 

உடல் எடையில் மாற்றம்:

திடீரென்று உடல் எடை குறைப்பது, உடல் எடை அதிகரிப்பது, உடல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இது, மாதவிடாய் பிரச்சனையை ஏற்படுத்தும்.

 

பிராணயாமா (சுவாசப் பயிற்சி):

இது ஒரு ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்கு செய்ய வேண்டிய சுவாசப் பயிற்சியாகும். ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் பயனுள்ள சுவாசப் பயிற்சி அனுலோம் - விலோம்.

 

அனுலோம் - விலோமைப் பொறுத்தவரை, முதலில் வலது நாசியினை மூடிக்கொண்டு உங்கள் இடது நாசி வழியாக சுவாசிக்க வேண்டும். அடுத்து, இடது நாசியை மூடிக்கொண்டு வலது நாசி வழியாக சுவாசிக்கவும்.

 

மறுபடியும், வலது நாசி வழியாக சுவாசிக்கவும், இடது வழியாக வெளியேறவும். இதே போன்று 10 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

 

யோகா:

உங்கள் உடல்நலம் மற்றும் மாதவிடாய் சுழற்சியை சரியான முறையில் மேம்படுத்த நீங்கள் ஒவ்வொரு நாளும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். இருப்பினும், மாதவிடாய் சுழற்சியின்போது யோகா செய்யலாமா அல்லது இல்லையா என்ற கேள்வி இன்னும் விவாதத்திற்குரியது.

 

ஆயினும்கூட, பெரும்பாலான ஆயுர்வேதக் கொள்கைகள், பெண்கள் அன்றாடம் மிதமான யோகாவைக் மேற்கொள்ள பரிந்துரைக்கின்றன. மேலும், மாதவிடாய் காலங்களில் லேசான யோகா வடிவம் பெண்களுக்கு நல்லது.

 

யோகா நமது ஹார்மோன்களின் அளவுகளைச் சமநிலைப்படுத்துகிறது. யோகாசனங்கள் நமது உடலின் ரத்த ஒட்டத்தைச் சீர் செய்கிறது. யோகாவின் மூலம் நமது உடலையும் மனதையும் நம்மால் பிரித்துப்பார்க்க முடிகிறது. இதனால், நாம் செய்யும் செயல்களை நம்மால் கூர்ந்து கவனிக்க முடிகிறது. இதன் மூலம் விழிப்புணர்வு இல்லாமல் பதற்றமாக நாம் செய்யும் பல செயல்களைத் தடுக்க முடிகிறது.

 

அதுமட்டுமின்றி, யோகா பயிற்சி மூலம் பி.சி.ஓ.எஸ், கருவுறாமை, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்த முடியும்.

 

இன்றைய நவீன காலத்தில் உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, உறக்கம், மனநிலை, உடல் இயக்கம் என அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத மருத்துவத்தின் கோட்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்களின் மாதவிடாய் சுழற்சி நிச்சயம் சீராகும்.